செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், யுகே கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் இந்த குடும்பப் படம். ஆம், படத்தின் கதையை ஒரு குடும்பமாக தாங்கிப் பிடித்துள்ள படம்.
கதாநாயகன் சினிமா இயக்குநராகும் கனவுடன், சென்னை திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கி அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார். அவருக்கு சகோதரர்கள் இருவரும் உறுதுணையாக உள்ளனர். அவரது பெற்றோர் மற்றும் காதலி உட்பட அனைவரும் ஹீரோவின் வெள்ளித்திரை கனவை நனவாக்க தோள் கொடுக்கின்றனர்.
இறுதியில், நாயகன் தனது லட்சியத்தில் வென்றாரா, அவரது காதல் கைகூடியதா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
உதய் கார்த்திக் கதாநாயகனாகவும், சுபிக்ஷா காயாரோஹணம் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இருவர் இடையே சூப்பர் கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகளில் அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார் சுபிக்ஷா. இவர் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு உள்ளது.
தாடியுடன் தோன்றும் உதய் கார்த்திக் இந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். அவர் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் ஆதரவை அள்ளிச் செல்கிறார்.
விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், கவின், ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர் மோகன சுந்தரம் காமெடியில் நம் வயிற்றை பதம் பார்க்கிறார்.
பாடல்களோ தாலாட்டும் ரகம்… அனிவீ இசையும், மெய்யேந்திரனின் கேமரா விளையாடலும் படத்திற்கு பெரிய பிளஸ் என்றே கூறலாம்.
குடும்பத்தின் ஆதரவு இருந்தால் இமயத்தையும் வெல்லலாம் என்பதை காதல், காமெடி கலந்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்வகுமார் திருமாறன். அந்தவகையில் ரசிகர்களையும் அவர் ஈர்த்திருக்கிறார்.
ஃபேமிலி படம் – தாராளமாக தியேட்டருக்குச் சென்று ரசித்துப் பார்க்க வேண்டிய ஜனரஞ்சகமான படம்.
– நிருபர் நாராயணன்