பிரபல பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஆர்ட் டைரக்டராக உள்ள அகத்தியா ( ஜீவா) சொந்தமாக படம் எடுப்பதற்காக பழங்கால அரண்மனையில் செட் அமைக்கிறார். ஆனால் படப்பிடிப்பில் தடைகள் ஏற்படுகிறது. அதேநேரத்தில், கிடைத்த அரண்மனை மூலம் பணம் சம்பாதிக்க வழி சொல்கிறார் அவரது காதலி வீணா ( ராஷி கண்ணா ). அதன்படி வெளிநாடுகளைப் போல பேய்வீடாக மாற்ற, எதிர்பார்த்தபடி வருமானம் கிடைத்தாலும் சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. அதன் மர்மத்திற்கு விடைகூறுவது தான் படத்தின் மீதிக்கதை.
ஜீவா வழக்கம் போல காதல், காமெடி, ஆக்ஷன் என அக்மார்க் ரக நடிப்பை கொடுத்திருக்கிறார். கோலிவுட்டில் அவரது அடுத்த ரவுண்ட் தொடங்கியிருக்கிறது என்று கூறலாம்.
படத்தின் இன்னொரு கதாநாயகனாக இன்றும் இளமையுடன் காணப்படும் அர்ஜுன் அற்புதமாக நடித்திருக்கி்றார். சித்த மருத்துவராக வந்து இதயங்களை கொள்ளை கொள்கிறார்.
கவர்ச்சி, காதல், ரொமான்ஸ் என படத்திற்கு அழகு சேர்க்கிறார் ராசி கண்ணா. ராதா ரவி, சார்லி, ரோஹிணி, நிழல்கள் ரவி, உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். யோகி பாபு , விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் நம் வயிற்றை பதம் பார்க்கிறார்கள்.
ஆங்கிலேயர் கால செட்டிங்ஸ், கிராபிக்ஸ் கலை இயக்குநர் பி.ஷண்முகத்தின் உழைப்பை காட்டுகிறது.
இசைஞானி இளையராஜாவின் “என் இனிய பொன் நிலாவே” பாடலை அழகாக பயன்படுத்தி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவரது பின்னணி இசை படத்திற்கு பலம்.
கவிதைகளால் தமிழுக்கு முத்துக்களை கோர்த்த பாடலாசிரியர் பா.விஜய், இப்படத்தை இயக்கி வெள்ளித்திரை வடிவில் மகுடம் சூட்டியிருக்கி்றார்.
– நிருபர் நாராயணன்