அகாலி என்பது பஞ்சாபில் பேசப்படும் ஒரு வட்டார மொழி. இதற்கு இறப்பு என்பதே இல்லாத மனிதன் என்று அர்த்தம். அந்த தலைப்பில் வெளிவந்திருக்கும் படமும் பரபரப்பான ஒரு க்ரைம் திரில்லராக மிரட்டுகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கான விசாரணையில் இறங்குகிறார் காவல் அதிகாரி ஜெயகுமார். அவரது விசாரணையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. சுடுகாடு, சாத்தான், நரபலி என்று சும்மா மிரட்டியிருக்கிறார்கள்.
சாத்தானை வழிபடும் குழுவினர், சுடுகாட்டில் விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் காவல் அதிகாரி கண்டுபிடிக்கிறார். இதுதொடர்பான பல மர்ம முடிச்சுகளை அவர் எப்படி துப்பு துலக்குகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
படத்தில் பாதிரியராக நடித்துள்ள நாசர் படத்திற்கு பலமாக திகழ்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயகுமார், தலைவாசல் விஜய், யாமினி, தாரணி ஆகியோரும் தங்கள் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு ஒரு ப்ளஸ் என்றே கூறலாம். கிரி முர்பியின் கேமரா கோணங்களில் ஒவ்வொரு பிரேமும் நகர்வும் அற்புதம். புதுப்புது லொகேஷன்கள் இதுவரை நாம் காணாதவையாக உள்ளன.
அனிஷ்மோகனின் பின்னணி இசை பரவாயில்லை.
படத்தை முகமது ஆஷிப் ஹமீது இயக்கியிருக்கிறார். சாத்தான்களை வழிபடும் குழுக்களின் ரகசியங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவுக்கு இது புதிது என்றாலும், இவ்வளவு உழைப்பில் வேறொரு எளிமையான கதையை வழங்கியிருக்கலாம் என தோன்றுகிறது.
– நிருபர் நாராயணன்