சென்னையில் ‘மீல் மங்கி’ என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் கதாநாயகன் அர்ஜுன் தாஸ். அந்தப் பணியில் தினசரி அவர் சந்திக்கும் அவமானங்களும், அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளையும் அழகுற எடுத்துரைக்கிறது அநீதி.
ஒரு பணக்கார பணிப்பெண்ணாக இருக்கும் துஷாராவுக்கும் நமது நாயகனுக்கும் காதல் மலர்கிறது. எதிர்பாராத விதமாக ஒரு மரணம் அவர்கள் வாழ்வில் குறுக்கிடுகிறது. அது இவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி சொல்கிறது ‘அநீதி’ திரைப்படத்தின் கதை.
படத்தில் மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ். அவருடன் போட்டி போட்டு பல்வேறு முகபாவங்களில் வெளிப்படுத்துவதில் ஸ்கோர் செய்கிறார் துஷாரா விஜயன்.
பிக்பாஸ் புகழ் “தீக்குச்சி” வனிதா விஜயகுமார் நடிப்பில் அனல் பறக்கிறது. அதேபோல் சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின் வில்லத்தன கேரக்டரும் பாராட்டும்படி உள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் முதல் இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சிக்கு காட்சி படத்திற்கு உயிரூட்டுகிறார் ஜி.வி.பி.
மனப்பிறழ்வுக்கான சிக்கலான மனநிலையை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சூப்பர். படத்தொகுப்பாளர் ரவிக்குமாரின் கைவண்ணம் கவனிக்கத்தக்கது.
படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை நகர்வு வேகமெடுக்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் 24 மணி நேரமும் சாலையில் காணப்படும் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்சனைகளை இன்னும் கூட சற்று அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.
பொருளாதார, குடும்பச் சூழலில் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சாதாரண மனிதர்களுக்கான நீதியின் குரலாய் ஓங்கி ஒலிக்கிறது அநீதி. அந்தவகையில் இயக்குநர் வசந்த பாலனின் மற்றுமொரு அற்புதப் படைப்பு அநீதி.
– நிருபர் நாராயணன்