டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” மாறுபட்ட படைப்பாக வெளிவந்துள்ளது.
பார்வையில்லாத பியானோ இசைக் கலைஞராக வருகிறார் பிரசாந்த். அவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கு நடுவே, தங்கள் பிறந்தநாளன்று மனைவியை ஆச்சரியப்படுத்த நேரில் பியானோ வாசிக்க அழைப்பு விடுக்கிறார் கார்த்திக். அவர் வீட்டுக்குச் செல்லும்போது, அதிர்ச்சி சம்பவமாக இறந்து கிடக்கிறார் கார்த்திக்.
வீட்டில், போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியுடன் இருக்கிறார் சிம்ரன். அதன்பிறகு பிரசாந்த் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். அவர் அதிலிருந்து தப்பித்தாரா, கார்த்திக் ஏன் கொல்லப்பட்டார் போன்றவற்றுக்கான விடையை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பிரசாந்துக்கு இப்படம் பெரும் திருப்புமுனை படமாக அமைவது உறுதி. கூலிங் கிளாஸுடன் அற்புதமான நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறார்.
தமிழ்ப்பெண் பிரியா ஆனந்த் அழகாகவும், கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கிறார். சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். யோகிபாபு, ஊர்வசி காமெடி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
ரவியாதவின் கேமராவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.
மிக விறுவிறுப்பான கதைநகர்வை நேர்த்தியாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர் தியாகராஜன். ஹேட்ஸ் ஆஃப் சார்.
மொத்தத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான திரில்லர் படம். தாராளமாக தியேட்டருக்குச் சென்று ரசித்துப் பார்க்கலாம். ரசிகர்களுக்கு செம விருந்து…!
– நிருபர் நாராயணன்