திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அன்பகம் கலையின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பகம் கலையைப் பற்றி இங்கு ஒவ்வொருவரும் எடுத்து சொன்னபோது நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த சூழ்நிலையிலும் அன்பகம் கலை தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை நான் பார்த்தேன். தேர்தலில் கட்சியினர் சிறப்பாக பணியாற்றுகிறார்களா? என்று மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு அன்பகம் கலை பேசிக் கொண்டிருந்தார். இதுதான் திமுக.
நான் ஒரு ஆண்டு மிசாவில் கைதாகி சென்னை சிறையில் அடைபட்டு, அதன்பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது, முதல்முதலாக கலையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். சிறையில் இருந்து கோபாலபுரம் வரை தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து வந்து முழங்கியவர் அன்பகம் கலை. அதுமுதல் இன்று வரை 47 ஆண்டு காலம் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு முறை கூட அன்பகம் கலை என்னிடம் இதை செய்து கொடுங்கள் என்று கேட்டதில்லை.
என்றைக்கும் எனக்கு பக்கபலமாக அன்பகம் கலை இருந்து கொண்டிருக்கிறார். நான் சொல்வதை உடனே நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர். நான் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு செல்வதாக இருந்தாலும், அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் 2 நாட்களுக்கு முன்பே கலை அங்கு சென்றுவிடுவார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்பதை பார்ப்பார்.
இன்று அவரது இல்லத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதிலாவது அவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருப்பாரா என்று பார்த்தேன். ஆனால் இன்றும் அவர் எப்போதும் அணியும் அதே காவி கலர் உடைதான். அவரது இல்லத்தில் நடைபெறும் திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
– ஆர். நாராயணன்