திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு குடோனில் இருந்து ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சூரப்பட்டிற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 850 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் குடோன்களில் குட்கா பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம், குட்கா கடத்தல்காரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருட்களால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், 850 கிலோ குட்காவை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
– நிருபர் நாராயணன்