சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக இருந்தாலும், பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.
அம்பத்தூரில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகம் அருகே அமைந்துள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து திருவேற்காடு பேருந்து நிலையம் வரை, ஒரே நேர்கோடு போல் அமைந்துள்ள சாலையில் மட்டும் 11 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மொத்த தூரம் வெறும் 7.4 கி.மீ. மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சில கடைகளில் ஷட்டரை மட்டும் கீழே இறக்கிவிட்டு கால நேரமின்றி விற்பனை ஜரூராக நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில், கடந்த 74-வது குடியரசு தின விழாவில், மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர் ஆகிய 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார். இதுபோல், டாஸ்மாக் விற்பனைக்கு உதவும் அம்பத்தூர் மதுவிலக்குப் பிரிவு போலீசாருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கலாம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து கூறுகின்றனர்.
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை அம்பத்தூர் தொழிற்பேட்டை தான். இங்கு சுமார் 5 ஆயிரம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணி முடிந்து களைப்புடன் செல்லும் தொழிளார்களில் ஏராளமானோர் வீட்டுக்கு செல்லும் முன்னர் வரிசையில் காத்துக் கிடப்பது டாஸ்மாக் கடை வாசலில் தான்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிளாட் நம்பர் B4-ல் தான் சென்னை மண்டலத்தின் மிகப்பெரிய டாஸ்மாக் டிப்போ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது அம்பத்தூர் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனையில் கட்டுப்பாடின்றி கல்லா கட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காவல் உதவி மையம் அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடையால், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் தினமும் பொதுமக்களும் பயணிகளும் குடிமகன்களால் பெரும் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் சாலையோரத்தில் நின்றபடி மது அருந்திவிட்டு, பாட்டில், பிளாஸ்டிக் தம்ளர்கள், சைடிஷ் காலி பாக்கெட்டுகள் போன்றவற்றை அங்கேயே வீசிச் செல்வதால் பொது இடம் அலங்கோலம் ஆகி சுகாதாரக் சீர்கேடும் ஏற்படுவதாக அம்பத்தூர் பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவேற்காடு, முகப்பேர் சர்ச் ரோடு உட்பட அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தேநீர் கடைபோல் கூடி நின்றுகொண்டு குடிமகன்கள் கும்மாளம் அடிப்பதை போலீசார் உட்பட அனைவரும் வேடிக்கை தான் பார்க்கின்றனர்.
அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீஸார் என்ன தான் செய்கிறார்களோ என தெரியவில்லை…!
தகவலை நமது தலைமை செய்தியாளரிடம் கூறிவிட்டு, தன் கூடு நோக்கி பறந்தது ஊர்குருவி.