சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை சார்பில், ஸ்ரீவாரு பார்த்தசாரதி பேலஸ் மண்டபத்தில் இவ்விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு கலந்துகொண்டார்.
மேலும் சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளிக் குழுமத்தின் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இச்சங்கத்தின் அயப்பாக்கம் கிளை தலைவர் டி.லட்சுமணன், கெளரவத் தலைவர் கே.சுப்பையா, கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனர் நல்லையா, ஹரிதாஸ், மெஜஸ்டிக் வி.எம்.பிரபாகர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து சுருதிலயா குழுவினர் சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. யுகாதி கொண்டாட்ட விழாவில் ஏராளமான மக்கள் குடும்பம் சகிதமாக ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு தேநீர் மற்றும் இரவு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது
விழா இறுதியில், சங்கத்தின் அயப்பாக்கம் கிளை பொருளாளர் ராஜி நன்றியுரை நிகழ்த்தினார். இதையடுத்து விழா இனிதே நிறைவுபெற்றது
– நிருபர் ஆர்.நாராயணன்