விவசாயம் மற்றும் உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட சிவகார்த்திகேயன் வேலை தேடி சென்னை வருகிறார். யோகிபாபு, கருணாகரன் நண்பர்களாக கிடைக்க சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்நிலையில், ஒரு தனியார் மைனிங் நிறுவனம் சட்டவிரோதமாக பூமியை குடைந்து நோவா கேஸ் எடுக்கிறது. இதனால் விஷவாயு வெளிப்பட்டு பொதுமக்கள் உயிரிழக்கின்றனர்.
இதுகுறித்து அறிந்த வேற்று கிரக ஏலியன்கள், பூமியை காப்பாற்ற தங்களில் ஒருவரை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த ஏலியன் சிவகார்த்திகேயனை சந்திக்க, இருவரும் இணைந்து தனியார் நிறுவனத்தின் சமூகவிரோத செயல்களை தடுத்தார்களா, பூமியையும் மக்களையும் காப்பாற்றினார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழில் இதுபோன்ற அறிவியல் புனைவு படங்கள் அவ்வப்போது வந்திருந்தாலும், அயலான் தரமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.
ஹாலிவுட்டில் ஏலியனை பூமிக்கு விரோதமானவர்களாகவே சித்தரித்து திரைப்படங்கள் எடுக்கப்படும் நிலையில், பூமியை ஏலியன் காப்பாற்றுவதாக கதை அமைத்திருப்பது தமிழர்களின் கற்பனைத்திறனுக்கும் சிறந்த திரைக்கதை அமைப்புக்கு ஒரு சான்று.
சிவகார்த்திகேயன் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. அது இந்த சயின்ஸ் பிக்ஷன் கதையிலும் தொடர்கிறது. அவருடன் இணைந்து யோகிபாபு, கருணாகரன், ஏலியன் கூட்டணி அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கச்சிதமாக தனது பங்களிப்பை வழங்கியிருக்கி்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதம். ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் தெரிகிறது.
அயலான் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
– நிருபர் நாராயணன்