ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை கோயில் கருவறையில் அழகுற நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீராமர் கைகளில் வில், அம்பு வைத்துள்ளபடி காட்சியளிக்கிறார். கோயிலின் கருவறை பளிங்கு கற்களாலும், ராமரின் சிலை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த கருங்கல்லினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, ராமர் சிலைக்கு முதல் பூஜையை செய்து பிரதிஷ்டை விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஸ்ரீராமரின் பாதத்தில் துளசி மற்றும் பூக்களை சமர்ப்பித்தும், ஆரத்தி காட்டியும் வழிபட்டார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, “நாட்டு மக்கள் இன்றைய தினத்தை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம். புதிய காலச் சக்கரத்தின் தொடக்கம். ராமர் பாலம் தொடங்கும் தமிழகத்தின் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். எனது 11 நாள் விரதத்தில் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களில் வழிபட்டேன். பல்வேறு மாநிலங்களில் பல மொழிகளில் ராமாயணம் கேட்டேன். ஸ்ரீராமர் நம் தேசத்தை இணைக்கும் கடவுளாக திகழ்கிறார்” என குறிப்பிட்டார்.
அயோத்தி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கங்கணா ரனாவத், சச்சின், முகேஷ் அம்பானி என பல்வேறு துறைகளை சேர்ந்த விஐபிக்கள் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுதோறும் அயோத்தி வந்து ராமரை தரிசிப்பேன் என தெரிவித்துள்ளார்.
அயோத்தி கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் உட்பட சுமார் 150 கோடி மக்கள், தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றின் மூலம் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர். மேலும், வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களிலும் பொதுமக்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி பிரசாதம், அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
அயோத்தி ராமர் கோயில் நேரடி தரிசனத்திற்கு srjbtkshetra.org என்ற இணையதளத்தின் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நாமும் வாழ்வில் ஒருமுறையாவது அயோத்தியில் அருள்பாலிக்கும் குழந்தை ராமரை தரிப்போம்.
ஜெய் ஸ்ரீராம்!
– நிருபர் நாராயணன்