“அயோத்தி” திரைப்படம் சசிகுமாரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல்.
அயோத்தி நகரில் இருந்து தென்னாட்டு புண்ணிய பூமி ராமேஸ்வரம் வருகிறது ஒரு இந்து குடும்பம். முரட்டுத்தனமான குடும்பத் தலைவரின் குணத்தால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் அவரது மனைவி இறந்துவிட, போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல விரும்புகிறார் குடும்பத் தலைவர்.
அவருக்கு கார் டிரைவரின் நண்பரான கதாநாயகன் சசிகுமார் எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதும், ஒரு முரட்டுத்தனமான மனிதரை மனைவியின் மரணம் எப்படி மாற்றுகிறது என்பதும் தான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் இப்படியொரு கதையம்சம் உள்ள திரைப்படம் வந்து நீண்ட காலம் ஆகிறது. அந்தவகையில், கதையை நம்பி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சசிகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் இயக்குநர் சசிகுமார்.
குடும்பத் தலைவராக வரும் யஷ்பால் சர்மா, அவரது மகளாக நடித்துள்ள பிரியா அஸ்ரானி, சசிகுமாரின் நண்பராக வரும் சின்னத்திரை பிரபலம் புகழ் உள்ளிட்டோர் மிக கச்சிதமாக நடித்துள்ளனர்.
ஹிந்தி பேசும் கதாபாத்திரங்களை வைத்து அப்படியே யதார்த்த நிலையில், மிக அற்புதமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் மந்திரமூர்த்தி. இவரது திரை மந்திரத்தில் ரசிகர்கள் மயங்கிப்போனார்கள் என்றே கூறலாம்.
ரகுநந்தனின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது.
படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராதது. “இதுதான்டா எங்கள் இந்தியா” என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நிறைந்த மனதுடன் தியேட்டரை விட்டு செல்கின்றனர்.
மனிதத்தை கற்பிக்கும் அயோத்தியை… தியேட்டரில் ஒருமுறை அல்ல, பலமுறை பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்