விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது:
“ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் நல்லது செய்தால் என்னை போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இருக்காது. நாங்களும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். ஒரு கொடியை பிடித்துக் கொண்டு வரவேண்டிய நிலையும் உருவாகாது.
அந்த கட்சி, இந்த கட்சி் என்றில்லாமல் ஏற்கனவே இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான். எனவே, 2026-ல் நான் அரசியலுக்கு வருவது மற்றவர்கள் கையில் தான் உள்ளது.
என்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் எனக்கு ரொம்ப முக்கியம். பலர் வட்டிக்கு பணம் வாங்கி தான் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்கு தான் என்னை போன்றவர்கள் கடினமான சண்டைக் காட்சிகளிலும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் எங்களுக்கும் தொடர்ந்து படம் கிடைக்கும்.
எனக்கு ரத்னம் படத்தில் நல்ல சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களும் அதிகளவில் வெற்றி பெற வேண்டும். சினிமாவில் பலரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
ராஜாபாதர் தெருவில் உள்ள எனது அலுவலகத்தில் வருபவர்கள் யாரும் பசியோடு திரும்பக் கூடாது. நான் சாப்பிடும் அதே உணவை தான் என்னை தேடி வாய்ப்பு கேட்டு வருபவர்களுக்கும் வழங்குகிறேன். என்னிடம் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது பிறருக்கு உதவி செய்வேன். இதை இந்த படத்தின் ப்ரோமஷனுக்காக வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. உணர்வுப்பூர்வமாக கூறுகிறேன்.
இங்கு பிஆர்ஓ நிகில் விதவிதமாக காஸ்ட்யூம் மாற்றி எங்களை ஆச்சரியப்படுத்துகிறார். அடுத்து டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இப்படத்தில் என்னை சிறப்பாக நடனமாடச் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளும் அற்புதமாக வந்திருக்கின்றன.
இந்த விழாவுக்கு எனது பெற்றோரும் வந்திருக்கிறார்கள். எப்போது கல்யாணம் செய்வாய் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் ஆர்யா திருமணம் முடிந்த பிறகு என்று கூறியிருந்தேன். அவரும் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.
எனது பெற்றோர் மீண்டும் கேட்டபோது, நடிகர் பிரபாஸ்க்கு திருமணம் முடிந்த பிறகு என்று கூறியுள்ளேன். ஒருவேளை அவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டால், அடுத்து பாலிவுட் சல்மான் கானுக்கு திருணம் முடிந்த பிறகு என்று எனது பெற்றோரிடம் கூறிவிடுவேன்.”
இவ்வாறு நடிகர் விஷால் நகைச்சுவை கலந்து யதார்த்தமாக பேசியது பத்திரிகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அவர் அரசியலுக்கு வரப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போதுள்ள அரசியல்வாதிகள் நல்லது செய்யாவிட்டால் நிச்சயம் தான் அரசியலுக்கு வருவேன் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– நிருபர் நாராயணன்