நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம் பெற்ற மாணவர்களை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த 1,500 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சாதனை மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா, சென்னை நீலாங்கரையில் சனிக்கிழமை காலை நடந்தது. இதில் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அத்துடன் சிறப்பு பரிசாக ஒரு வைர நெக்லசும், கல்வி உதவித் தொகையாக இரண்டரை லட்சமும் வழங்கப்பட்டது.
5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன், தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். மற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழுடன், தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார் விஜய்.
அனைத்து மாணவ-மாணவி களுக்கும் நடிகர் விஜய் தனது கையால் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது
நான் நடிகன் ஆகவில்லை என்றால் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன், டாக்டராக ஆகியிருப்பேன் என்றெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. என் கனவெல்லாம் சினிமா, நடிப்புதான். அதை நோக்கிதான் என் பயணம் போய்க்கொண்டிருக்கிறது.
‘கார்டு இருந்தா எடுத்துப்பாங்க… ரூபாய் இருந்தா பிடுங்கிப்பாங்க… ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என்று ஒரு படத்தில் ‘டயலாக்’ வரும். இது என்னை மிகவும் பாதித்த வரிகள். ஏனெனில் இதுதான் எதார்த்தம்.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நீண்ட நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுக்கான நேரம்தான் இது.
நம் வாழ்க்கை நம் கையில் முழுமையான கல்வி என்பது படித்து டிகிரி வாங்குவது மட்டும் ஆகாது. படித்த, கற்ற விஷயங்கள் எல்லாம் மறந்து போகும்போது எஞ்சிய விஷயம் எதுவோ, அதுவே கல்வி என்றார் ஐன்ஸ்டீன். முதலில் இது புரியவில்லை. ஆனால் போகப்போக புரிந்தது.
பணத்தை இழந்தால் ஒன்றும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள். ஆனால் குணத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
பெற்றோர் கட்டுப்பாட்டில் இருந்த நீங்கள், இனி மேல்படிப்புக்காக வேறு ஊர்களுக்கு சென்று படிப்பீர்கள். விடுதிகளில் தங்கி படிப்பீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். முதல் தடவையாக பெற்றோர் கண்காணிப்பை தாண்டி, வேறு ஒரு வாழ்க்கைக்கு போகும்போது, அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை, சுய ஒழுக்கத்துடன் கவனமாக கையாளுங்கள்.
நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய, நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போகிறீர்கள். ஆனால் நம்ம விரல வச்சு நம்ம கண்ணையே குத்துறதை கேள்வி பட்டதுண்டா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் இப்போது நாமும் செய்து கொண்டிருக்கிறோம். என்னவென்றால், பணம் வாங்கி ஓட்டு போடுவது.
ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணம் கொடுக்கிறார்கள். ரூ.15 கோடி செலவு ஆகியிருக்குமா? ஒருத்தர் ரூ.15 கோடி செலவு செய்கிறார் என்றால், அதற்கு முன்னாடி எவ்வளவு சம்பாதித்திருப்பார்? இதையெல்லாம் யோசித்து பாருங்கள். இதெல்லாம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.
உன் நண்பர்களை கூறு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது நேற்றைய வார்த்தைகள். ஆனால், இன்று நீங்கள் பின்பற்றும் சமூக ஊடகங்களை சொல்லுங்கள், உங்களை பற்றி சொல்கிறேன் என்பது தான் புதுமொழியாக உள்ளது. சமூக ஊடகங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அதில், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் பாடப் புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும். முடிந்தவரை படியுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தேவையற்றதை விட்டுவிடுங்கள்.
இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
நடிகர் விஜய் சளைக்காமல் தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத் தொகையையும் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட மதிய விருந்து அளிக்கப்பட்டது.
– நிருபர் நாராயணன்