படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நாடு சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது.
நெல்லை சீமையின் செங்காடு கிராமத்தில் வெளியுலக தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் வசிக்கும் பாமர மக்கள் பருத்தி தொழில் சார்ந்து பிழைக்கின்றனர். அவர்களை ஆங்கிலேய அதிகாரி அடிமைகளை போல் நடத்துகிறார். அந்த அதிகாரியின் மகன் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரனாக உலா வருகிறான். இதனால் பயந்துபோன ஜமீன்தார் தனது மகள் ரேவதி சிறுவயதிலேயே இறந்துவிட்டதாக நாடகமாடி ஆங்கிலேயரின் மகன் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார்.
அதே நேரத்தில் பரமன் கதாபாத்திரத்தில் வரும் ஜூனியர் நவரச நாயகன் கவுதம் கார்த்திக் ஜமீன்தார் மகளை ஒருதலையாக காதலிக்கிறார். ஜமீன் மகள் உயிரோடு இருப்பதை கண்பிடித்துவிட்ட அதிகாரியின் மகன், அவளை நெருங்க, வேறு வழியின்றி தனது மகளை உயிரோடு பூமியில் புதைக்க, நாயகியை ஹீரோ காப்பாற்றுகிறார். அதற்கான சந்தர்ப்பமும் அடுத்து நடப்பவையும் தான் படத்தின் அஸ்திவாரம்.
காதலில் பொங்கி வழிவதும், கைகூடாத காதலுக்காக ஏங்கி தவிப்பதும், அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும் என படம் முழுவதும் தனது கலைத்திறனை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் ஜூனியர் நவரச நாயகன்.
ஜமீன்தார் மகள் தீபாலியாக வரும் ரேவதி புதுமுகம். மேக்கப் இல்லாமல் அழகாகவும் நளினமாகவும் நடித்துள்ளார். இவரை தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே உடையில் தான் வருகிறார்கள்.
கவுதம் கார்த்திக்கின் நண்பராக சின்னத்திரை நடிகர் புகழ் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் கண்கலங்கவும் வைத்துவிடுகிறார்.
படத்திற்கு ஒளிப்பதிவு ஒரு பிளஸ் என்றே கூறலாம். அழகான லைட்டிங், கேமரா கோணங்கள் மூலம் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.
பின்னணி இசையிலும் பாடல்களிலும் முத்திரை பதித்துள்ளார் இசையமைப்பாளர் சான் ரோல்டன்.
முதல் படம் என்று கூற முடியாத அளவு ரிஸ்க்கான கற்பனை கதையை வெள்ளித்திரையில் அழகாக படைத்திருக்கிறார் இயக்குநர் பொன்குமார். தமிழ் சினிமாவில் அவருக்கு பொற்காலம் காத்திருக்கிறது.
மொத்தத்தில் ஆகஸ்ட் 16, 1947 படத்தை, சற்று நாமும் குடும்பத்துடன் தியேட்டருக்கு சுதந்திரமாக சென்று ரசித்துவிட்டு வரலாம்.
– நிருபர் நாராயணன்