ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31-ம் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தி தான் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும்.
அதன்பிறகு இணைக்க ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராத கட்டணம் செலுத்தினால் மட்டுமே பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையா சொத்துகள் வாங்குதல், வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்துதல் போன்றவற்றுக்கு பான் கார்டு எண் குறிப்பிடுவது கட்டாயம். எனவே, பான் எண் செயலிழந்து விட்டால், மேற்கண்ட பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை ஏற்படும்.