ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள்.
சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது வீட்டுக்கு உறவினரான விதார்த் வருகிறார். இந்நிலையில், மத்திய அரசு நிதியுதவி மூலம் கழிப்பறை கட்ட, சரவணன் வீட்டின் பின்புறம் தோண்டும்போது, சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது.
இந்த தங்கப் புதையலை சரவணனும் விதார்த்தும் பங்கிட்டுக் கொள்ள நினைக்கும்போது, ஊரில் பலருக்கும் புதையல் கிடைத்த ரகசியம் தெரிய வருகிறது. அவர்களும் ஆயிரம் பொற்காசுகளில் பங்கு கேட்கிறார்கள். இறுதியில் புதையல் யாருக்கு சென்றது என்பதே படத்தின் மீதிக்கதை.
பொற்காசுகளுக்காக ஆசைப்படும் ஒவ்வொருவரும் மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்கள்.
நாயகன் விதார்த் நடிப்பில் அசத்தியிருக்கிறார். வழக்கம் போல தனது இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஹீரோயின் அருந்ததி நாயரின் காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
சித்தப்பு சரவணன், ஹலோ கந்தசாமி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான் நடிப்பு அற்புதம்.
இந்த படம் ஒரு யதார்த்தமான வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்து காட்டியுள்ளது. படம் முழுக்க ஆங்காங்கே சில திருப்பங்களும் உள்ளன. நகைச்சுவையை பஞ்சமில்லாமல் வாரி வழங்கி இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் ரசித்து, சிரித்து மகிழலாம்.
– நிருபர் நாராயணன்