அம்பத்தூர் எம்.டி.எச் சாலையில் உள்ள பிரபல தேநீர் கடை. அந்த கடையின் ஸ்பெஷல் சுண்டலை சுவைத்தபடி மசாலா டீ பருகிக் கொண்டிருந்தார் ரிப்போட்டரு தம்பி.
இந்தியா முழுவதும் டிரெண்டிங் ஆகியுள்ள “அண்ணனை பார்த்தியா” பாடலுக்கு சில காலேஜ் பசங்க நடனமாடும் ரீல்ஸை ரசித்துப் பார்த்தபடியே பணிபுரிந்தார் கடை ஊழியர்.
சில நிமிடங்களில், சைக்கிளை மிதித்தபடி அங்கு வந்து சேர்ந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா.
“ஏம்பா தம்பி… நாம சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சே… எப்படி இருக்கப்பா…!”
“வா… அழகு… நல்லாயிருக்கேன்…” என்ற தம்பி, இன்னொரு டீ ஆர்டர் செய்தார்.
“தம்பி வெயில் பொளக்குது. அதான் பீச்சுக்கு இன்னைக்கு பகல்ல போகலை… சாயந்திரம் ஒரு 4 மணிக்கு போனேன்னு வச்சுக்க… நம்ம சுண்டலை சட்டுபுட்டுனு வித்திட்டு ஒரு 8 மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டு வந்துடலாம்.. ஆமா தம்பி, நமக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை வரலையேப்பா… நீ கொஞ்சம் அதிகாரிங்க கிட்ட சொல்லக்கூடாதா…!”
“அழகு… அதெல்லாம் தேவையில்லப்பா…. வர்ற ஜூன் மாசம் 4-ம் தேதி மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் தரப் போறாங்கப்பா… நீ அக்கா பேருல திரும்ப அப்ளை பண்ணு… விடுபட்ட தகுதியுள்ள அனைவருக்கும் தரப்போறதா முதலமைச்சரு சொல்லியிருக்கிறாரு…”
“ஆமாப்பா, ஜூன் 4-ன்னு உனக்கு எப்படி தெரியும்… நிருபர் டைம்ஸ் பேப்பர்லையும் எதுவும் போடலை… வேறு பேப்பர்லையும் பார்த்த மாதிரி இல்லையே…” சூடான தேநீரை மெல்ல சுவைத்தபடி கேட்டார் அழகுராஜா.
“நம்ம சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மினிஸ்டர் கீதா ஜீவன், ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி தூத்துக்குடி பக்கத்துல ஒரு கிராமத்துல நடந்த விழாவுல பேசும்போது, சொந்த தொகுதி மக்களுக்கு பேச்சுவாக்குல தேதியை சொல்லிட்டாங்கப்பா…” விளக்கம் கொடுத்தார் ரிப்போட்டரு தம்பி.
“அப்படியா… அப்ப சரியாத்தான் இருக்கும்…” கண்ணாடி டம்ளரில் பாதி டீ காலியாகி இருந்தது.
“தம்பி… எங்க நம்ம கிசு கிசு கோவாலு ஆளையே காணோம். ஏதோ சினிமாவுல நடிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாப்ல…”
“ஆமாப்பா, போன வாரம் கூட வடபழனி கோயில்ல பார்த்தேன்… ஏதோ யூடியூப் சேனல் தயாரிக்கிற வெப் தொடர்ல நடிக்கிறாராம்… வர்ற சண்டே அன்னிக்கு அம்பத்தூர் பக்கம் வருவேன்னு சொல்லியிருக்காரு…”
“அப்ப அடுத்த வாரம் ஜாலியான பல கோலிவுட் தகவல்கள் கிடைக்கும். சரிப்பா… போன வாரம் திருச்செந்தூர் போயிருந்தேன். கோயிலுக்குள்ள ஒரே வசூல் வேட்டையா இருக்கேப்பா… நீ கொஞ்சம் நியூஸ் போடக் கூடாதா….” அப்பாவியாக கேட்டார் அழகு.
“என்னப்பா சொல்ற பக்தி மணம் கமழும் அமைச்சர் துறையில இப்படியுமா நடக்குது….!”
“அட… ஆமா தம்பி… தரிசனத்திற்கு 100 ரூபா, தேங்காய் உடைக்க 100 ரூபா… மொட்டை அடிக்க 100 ரூபா… விபூதி கொடுக்கவே 100 ரூபா… அப்படின்னு விதவிதமா வசூல் பண்றாங்க அர்ச்சகரா இருக்கிறவங்க… அவங்க காட்டுல பணமழை தான்….”
“என்னப்பா லிஸ்ட் போட்டு அர்ச்சகர்கள் வசூல் பண்றாங்க போல…” தேநீர் டம்பளரை மேஜையில் வைத்தபடி கேட்டார் ரிப்போட்டரு தம்பி.
“ஆமாப்பா, அது மட்டுமில்லை… ஒரு குடும்பத்துக்கு 2,000 ரூபா தனியா கொடுத்தா போதுமாம்… ஸ்பெஷல் தரிசனம் செய்ய வச்சு அனுப்புறாங்கப்பா…. இதுமாதிரி கோயில் நிர்வாகத்துல இருக்கிற ரூம் புக் பண்றதுலேயும் மோசடி நடக்குதப்பா… ரிசப்ஷன்ல ஆளே இருக்கிறது இல்லப்பா… திருச்செந்தூர் போற பக்தர்களை அந்த முருகன் தான் காப்பாத்தனும்…” கைகளை குவித்து முருகனை வேண்டியபடி கூறினார் அழகு.
“சரிப்பா, அழகு…. உங்க அக்கா பையன், ஆவடி பக்கத்துல ஏதோ நிலத்துக்கு பட்டா வாங்கனும்னு நேத்து எனக்கு போன் போட்டாருப்பா… என்னாச்சு….”
“ஒண்ணுமில்ல தம்பி, பட்டாவை மாத்தி தர ஒன்றரை லட்சம் கேட்கிறதா புலம்பிக்கிட்டு இருந்தான்ப்பா… ஆவடி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ரொம்ப கறாரா வசூல் பண்றாங்கப்பா… ஒரு ரூபா கம்மியா இருந்தாலும் வாங்க மாட்டாங்களாம்….” புலம்பியபடி கூறினார் ஆல் இன் ஆல் அழகுராஜா.
“அடேங்கப்பா… கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுப்பா, இதுக்குண்ணு அரசு சிறப்பு முகாம் நடத்துவாங்க, அங்க மனு கொடுத்தா பட்டா சீக்கிரம் வந்துடும். சரியா அழகு…”
“வானம் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே” என்ற இளையராஜாவின் ஹிட் பாடல் எங்கோ மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஓகே தம்பி, வெயிலு வேற கொளுத்த ஆரம்பிச்சிடுச்சு, அப்ப நான் கெளம்புறேன்… வர்ற சண்டே சந்திப்போம்.” தொப்பியை மாட்டியபடி சைக்களில் புறப்பட்டார் அழகுராஜா.
தேநீர் கடையில் காசை கொடுத்துவிட்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தார் ரிப்போட்டரு தம்பி.
– சந்திப்பு தொடரும்…