ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம்.
நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.
முழுக்கை சட்டை போட்டு வந்த மாணவர்கள் அவசரமாக எங்கோ சென்று அரைக்கை சட்டைக்கு மாறி வந்தனர். மாணவிகளின் நிலையோ பரிதாபம். தலைமுடிக்கு கிளிப் போடக்கூடாது, ஷூ போடக்கூடாது. தோடு, வளையல் கழற்ற வேண்டும். என்று ஏகப்பட்ட கண்டிஷன்களால் அவற்றை பெற்றோரிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு ரன்னிங் ரேசில் ஓடுவது போல் கேட்டை நோக்கி ஓடினர்.
செய்தி சேகரிக்க வந்திருந்தார் ரிப்போட்டரு தம்பி…
யாரோ ஒரு மாணவர் ஆதார் எடுக்காமல் வந்துவிட… அவரது தந்தை பெரும் பதற்றத்திற்கு உள்ளானார். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அவரிடம் விசாரிக்க….
“வீடு பக்கத்துல இருக்குற புதூர் சார்… ஆனா, அரை மணி நேரத்துல வீட்டுக்கு போய் எடுத்து வர முடியுமாண்னு தெரியலை… வண்டி வேற இல்லை” என்று புலம்பினார்…
“வாங்க சார், போய் எடுத்துட்டு வந்துடலாம்…” என்று சற்றும் தாமதிக்காமல் தனது பைக்கை ஸ்டார்ட் செய்தார் போலீஸ் ஒருவர். மாணவனின் தந்தை ஏறிக்கொள்ள பைக் சீறிப்பாய்ந்தது…
அடுத்த இருபதே நிமிடத்தில் ஆதாருடன் வந்தனர். மாணவர் அதை வாங்கிக் கொண்டு தேர்வு வளாகத்திற்குள் ஓடினார். இதைக் கண்டு அருகே இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டதுடன், அந்த காவலரை பாராட்டு மழையில் நனையச் செய்தனர். ரிப்போட்டரு தம்பியும் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
அதேநேரம், பள்ளி வாசலில்… கிசு கிசு கோவாலு பைக்கில் அவருடன் வந்திறங்கினார் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜா.
“வாங்கப்பா… எப்படி இருக்கீங்க… என்ன எம்ஜிஆரும் நம்பியாரும் ஒண்ணா வந்த மாதிரி இருக்கு…”
“மெரினா பக்கம் போயிருந்தேன்… அப்படியே அண்ணனையும் கூட்டிட்டு வந்தேன்…” சிரித்தக்கொண்டே கூலிங்கிளாஸை கழற்றியபடி கூறினார் கிசு கிசு கோவாலு…
“வாங்க கரும்பு ஜூஸ் குடிப்போம்…” என்ற கோவாலு அருகில் இருந்த தள்ளுவண்டி கடைக்கு அழைத்துச் சென்றார். மூவரும் ஆளுக்கொரு கிளாஸ் வாங்கியபடி, அங்கிருந்த மரத்தின் நிழலுக்கு வந்தனர்.
“ஏம்பா… கோவாலு புதுக்கட்சி தொடங்கின உங்க தலைவரு எப்படி இருக்காரு…” – நலம் விசாரித்தார் தம்பி.
“அடப் போங்கண்ணே… அவரை பார்க்க பனையூருக்கு நாலு நாளா அலைஞ்சும் பார்க்க முடியலேண்ணா… ராத்திரி வரை காத்துக் கிடந்தேன் அப்பதான் தெரிஞ்சுது…. அவரு சாயந்திரம் 6 மணிக்கு மேல வெளியே வரமாட்டாருன்னு….”
“ஏம்பா… விஐபிங்களை மட்டும் தான் அப்ப பார்ப்பாரா…” அப்பாவியாக கேட்டார் அழகு…
“இல்லை அண்ணே… சிப்ஸ்… பாரின் சரக்குன்னு அவரு வேற உலகத்துல இருப்பாராம்… ஒரே ஆட்டம் பாட்டம் தான்… டுவெல்வ் ஹவர்ஸ் கழிச்சு காலை 6 மணிக்கு தூங்கி எழும்போது தான் சகஜ நிலைக்கு திரும்புவாராம்…” – கண்களில் வேதனை தெரிய கூறினார் கோவாலு.
“ஏம்பா… வருங்கால முதல்வருன்னு நீங்கெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனீங்களே… அப்ப அவரு ஆட்சிக்கு வந்தா 6 மணிக்கு மேல அரசாங்கத்தையே மறந்திடுவாரா…” பேப்பர் டம்பளரை குப்பைக்கூடையில் வீசியபடி கேட்டார் அழகு…
“ஏற்கனவே அவரு களத்துக்கு வராமேயே கட்சி நடத்துறாருன்னு சொல்றாங்க…. இப்ப இது தெரிஞ்சா யூடியூப்காரங்க டிசைன் டிசைனா கலாய்ப்பாங்களே…” என்றார் தம்பி.
“ஆமாண்ணே… நான் சொல்றது 100 சதவீதம் உண்மைதான்… அவரால சாயந்திரம் ஆச்சுன்னா சரக்கு இல்லாம இருக்க முடியாது… இதை அவரால கட்டுப்படுத்த முடியலையாம்….” சத்தியம் செய்யாத குறையாக தகவலை உறுதிபடுத்தினார் கோலிவுட் ரகசியங்களை துல்லியமாக அறிந்த கிசு கிசு கோவாலு…
“சாதாரண குடிமக்கள் டாஸ்மாக் கடைக்கு காலாங்காத்தாலே காத்துக்கிடந்து வாங்கும்போது, அவரு கோடி கோடியா வச்சிருக்கிறவரு… அவரு குடிக்கக் கூடாதா” – புது தலைவருக்கு குரல் கொடுத்தார் அழகு.
“அழகு அண்ணே… இப்ப நம்ம அம்பத்தூருல இருந்து திருவேற்காடு வரைக்கும் ஒரே சாலையில ஆறேழு டாஸ்மாக் கடைங்க இருக்கு… இத்தனை இருந்தும் நள்ளிரவிலேயும் விற்பனை நடக்குது… அதிகாலையிலேயேும் விற்பனை நடக்குது… அதுமட்டுமா, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனையும் அம்பத்தூருல ஜெகஜோதியாக நடக்குது. பாவம், மதுவிலக்குப் பிரிவு போலீஸ்க்கு மட்டும் இது தெரியலை…” பாயின்டை எடுத்துக் கொடுத்தார் கிசு கிசு கோவாலு.
“அம்பத்தூர் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டரா இருந்த மேடம் இப்பதான் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஸ்டேஷனுக்கு போயிட்டாங்கப்பா…” என்றார் ரிப்போட்டரு தம்பி.
“புதுசா வர்ற அதிகாரியாவது கொஞ்சம் ஸ்டிரிக்டா இருந்தா நல்லாயிருக்கும்…” தலையை ஆட்டியபடி கூறினார் அழகு….
நண்பர்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நெருங்கிவிட்டது. சாலையில் ஏதோ இந்தி பாடலுக்கு நடனமாடியபடி ஒரு பெரிய கூட்டமே வந்து கொண்டிருந்தது.
“ஏதோ சேட்டு வீட்டு கல்யாணம் போல… மாப்பிள்ளை பாரு… ராஜா மாதிரி குதிரை மேல வர்றாரு…” உற்சாகமாக கூறினார் அழகுராஜா.
கலர் கலராக ராஜஸ்தான் பாரம்பரிய உடையில் இருந்த இளம்பெண்கள் முதல், வெள்ளை நிற உடையில் இருந்த முதியவர்கள் வரை, சாலை என்றும் பாராமல் ஜாலியாக நடனமாடியபடியே குதிரை முன்பாக சென்றனர்.
கிசு கிசு கோவாலுவும், ஆல் இன் ஆல் அழகுராஜாவும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
“அப்ப நான் கெளம்புட்டுமா, சண்டே அன்னிக்கு பீச்சுல மீட் பண்ணலாம்…” கிண்டியில் உள்ள அலுவலகம் நோக்கி பைக்கை கிளப்பினார் ரிப்பட்டோரு தம்பி.
– சந்திப்பு தொடரும்…