சென்னை மெரீனா பீச்.
தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா.
“அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.
“ஏய் வாப்பா, எங்கே ரிப்போட்டரு தம்பி வரலையா”, சொல்லி முடிப்பதற்குள் தள்ளுவண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார் தம்பி.
“நூறு ஆயுசு” என உற்சாகமாக கூறியபடி, ஆளுக்கொரு சுண்டல் தட்டை கொடுத்தார் அழகு.
சண்டே என்பதால் ஆங்காங்கே குடும்பம் குடும்பமாக வந்து மணற்பரப்பில் காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒரு குழந்தை ஸ்பிரிங் ரோல் பொட்டேடோ கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் அம்மா அதட்டிக் கொண்டிருந்தார்…
தூரத்தில் உள்ள கடையில், ஆரவாரக் குரலுடன் பலூன்களை துப்பாக்கியால் சுட்டு ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தது சிறுவர்கள் கூட்டம். அருகேயிருந்த டாட்டூ கடையில், ஏதோ திருவிழா போல கல்லூரி மாணவிகளின் கூட்டம் அள்ளியது…
கோடையிலும் சிலுசிலுவென காற்று வீச…. சுண்டலை கொறித்துக் கொண்டிருந்தனர் நம்ம நண்பர்கள்.
“நடிகர் விஷாலுக்கு கடைசியா கல்யாணத்தை அறிவிச்சிட்டாரு பார்த்தீங்களா…” பேச்சை ஆரம்பித்தார் கிசு கிசு கோவாலு.
“என்னப்பா சொல்றே…” சுண்டலை விற்றபடியே வியப்புடன் கேட்டார் ஆல் இன் ஆல்.
“ஆமாண்ணே, 47 வயசுல நடிகை தன்ஷிகாவை காதல் கல்யாணம் பண்றாருண்ணே… வர்ற ஆகஸ்ட் 29-ம் தேதி வந்தா அவருக்கு 48 வயசு. அன்னிக்கே கல்யாணத்தை வச்சிருக்காரு…” விவரத்தை கூறினார் கோவாலு.
“பழகுவதற்கு நல்ல மனிதர். எப்படியோ எல்லா விமர்சனங்களையும் தாண்டி, கல்யாண வாழ்க்கையில ஒருவழியா செட்டில் ஆயிட்டாரு பரவாயில்லை” என்றார் தம்பி.
“ஆமா தம்பி, காலேஜ் அட்மிஷன் போயிட்டிருக்கே… எந்த கோர்ஸை பசங்க விரும்பி சேர்றாங்க… பொண்ணுக்கு அட்மிஷன் போடனும்பா….”
“அண்ணே, பி.டெக் எய்ட்ஸ் படிப்பு தானே முதலிடத்துல இருக்கு…”
“என்னது பி.டெக்குல எய்ட்ஸ் பத்தின படிப்பா…” அவசரமாக கேட்டார் கோவாலு…
“அட, ஆர்ட்பீசியல் இன்டலிஜென்ஸ் அன்டு டேட்டா சயின்ஸை தான் சுருக்கமா எய்ட்ஸ்னு பசங்க சொல்றாங்க…” விளக்கிக் கூறினார் தம்பி.
“ஓகோ… அப்படியா…” மீண்டும் சுண்டலை வாயில் வீசத் தொடங்கினார் கோவாலு.
“அண்ணே, ஐ.டி., என்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்கிறது பெரும்பாடா இருக்கும். ஏன்னா திரும்புற திசையெல்லாம் என்ஜினியரிங்கா தான் இருக்காங்க… பி.ஏ., பி.காம் படிச்சா சுலபமா வேலையும் கிடைக்கும். அதனால பொண்ணுகிட்ட சொல்லி ஈஸியான கோர்ஸை படிச்சுட்டு ஜாலியா புடிச்ச வேலைக்கு போகச் சொல்லுங்க…” தனது கருத்தைக் கூறினார் ரிப்போட்டரு தம்பி.
“ஆமா தம்பி, நானும் அதைதான் முடிவு பண்ணியிருக்கேன். ஒரு டிகிரியை முடிச்சுட்டு, ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸை படிச்சா போதும்னு நினைக்கிறேன். ஏதோ கம்போடியாவுல கூட வேலை கிடைக்குமாமே…” என்றார் அழகு.
“அண்ணே, உண்மை தான். ஆனா, கம்போடியாவுல வேலை வாங்கித் தர்றதா சொல்லி நம்ம ஆவடி சிக்னல் பக்கத்துல இருக்குற CSC இன்ஸ்டியூட்டுல நூற்றுக்கணக்கான மாணவர்களை ஏமாத்தி லட்சக்கணக்குல மோசடி பண்ணி இருக்காங்களாம்… ஆனா, யாரும் புகார் தராததால இன்னும் சிக்காம இருக்காங்க… நம்ம ஆவடி போலீஸ் அவங்க மேல நடவடிக்கை எடுத்தா பல மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்” என்று ஆவேசமாக கூறினார் கிசு கிசு கோவாலு.
நண்பர்கள் அரட்டைக்கு நடுவே, “ஆபரேஷன் சிந்தூர்” டீ சர்ட் அணிந்தபடி கடந்து சென்றார் இளைஞர் ஒருவர்.
“அட இது என்னப்பா போர் முடிஞ்சு 2 வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள தேசபக்தி வாசகத்தோட டீ சர்ட் வந்துடுச்சா” ஆச்சரியத்துடன் கேட்டார் அழகுராஜா.
“ஆமாண்ணே, திருப்பூர்ல இந்த டீ சர்ட்டுக்கு ஏகப்பட்ட ஆர்டர் வந்திருக்காம்” என்றார் தம்பி.
“ஆமாண்ணே போர் முடிவுக்கு வந்தாலும் பாகிஸ்தான் பிரதமரோட அலப்பறை தாங்க முடியலேண்ணா…” வெடித்தார் அழகுராஜா.
“அது ஒண்ணுமில்லை அண்ணே, இந்தியாவோட போர் வியூகமும், தொழில்நுட்பத்தையும் கண்டு அமெரிக்கா, சீனாவே மிரண்டு போயிருக்காங்கப்பா… எல்லாம் நம்ம பிரம்மோஸ் ஏவுகணை தான் காரணம். இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்துல சீறிப்பாயும். ஒரு நொடிக்கு 6 கி.மீ. கடந்து போயிருக்கும்னா பார்றேன். சீனா இரவல் கொடுத்த வான் பாதுகாப்பு கருவியால கூட பிரம்மோஸை தடுத்து நிறுத்த முடியலைன்னா பார்த்துக்கோ. மே 7-ம் தேதி அதிகாலை வெறும் 23 நிமிஷத்துல, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மேல இந்திய ராணுவம் அடிச்ச அடியைக் கண்டு உலக நாடுங்க எல்லாம் மிரண்டு போயிட்டாங்க… அதுக்கு சேட்டிலைட் புகைப்படங்களும், நம்ம ராணுவம் வெளியிட்ட வீடியோவுமே சாட்சி. அதனால தான், வடிவேலு பாணியில… வாங்கின அடி வெளியே தெரியாம இருக்க ஓவரா கூவிகிட்டு இருக்காரு பாகிஸ்தான் பிரதமரு ஷெரீப்” – விளக்கமாக கூறினார் ரிப்போட்டரு தம்பி.
“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிச்சு நம்ம முதலமைச்சர் இந்த மெரீனா சாலையில பேரணி கூட நடத்துனாரு. நம்ம காப்பாத்துற ராணுவ வீரர்களோட தியாகத்தை புரிஞ்சுக்காம, சில அரைவேக்காடுகள் அரசியல் சாயம் பூசி விமர்சனம் பண்றாங்கப்பா” என்றார் அழகுராஜா.
மெல்லிய சாரல் மழை தொடங்கியது. தள்ளுவண்டிக்கு அருகே ஆல் இன் ஆல் அழகுராஜா வைத்திருந்த ஆளுயரக் குடைக்குள் ரிப்போட்டரு தம்பியும், கிசு கிசு கோவாலும் வந்து நின்று கொண்டனர்.
பரந்து விரிந்த மணற்பரப்பில் ஒண்டிக்கொள்ள இடம் இல்லாததால், சிலர் கொண்டு வந்திருந்த குடைகளை விரித்துக் கொண்டனர். மற்றவர்கள் சாரலில் நனைந்தபடி அதன் இனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அழகு அண்ணே, அடுத்த வாரம் கிளாம்பாக்கம் வந்துருங்க…. நிறைய பேசுவோம்… ரிப்போட்டரு தம்பியும், கிசு கிசு கோவாலும் ரெயின்கோட்டை மாட்டியபடி மெரீனாவில் இருந்து புறப்பட்டனர்.
– சந்திப்பு தொடரும்…