‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியலயா நடித்துள்ளார்.
வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என நம்பி 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சென்னையில் ஒரு அபார்ட்மென்ட் வீடு வாங்குகிறார் தனியே வாழும் சந்தானம். 25 லட்சம் பணத்தை வரதட்சணையாக கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்தால் கடன் தீரும் என பணக்கார பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். ரத்தினபுரி ஜமீனாக வரும் தம்பி ராமையா சந்தானத்திற்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்கிறார். அதன் பிறகு பல திருப்பங்கள், ஒரு சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார் சந்தானம். அவர் கடனை அடைத்தாரா, சிக்கலில் இருந்து விடுபட்டாரா என்பது படத்தின் மீதிக்கதை.
காதல், காமெடி, ஆக்ஷன், நடனம் என அத்தனை களத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார் வெற்றி கதாபாத்திரத்தில் வரும் சந்தானம். அவரது ஒன்லைன் பஞ்ச் அசத்தல். அழகுப் பதுமையாக வரும் கதாநாயகி ப்ரியலயா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
தம்பி ராமையா வழக்கம் போல் யதார்த்தமான காமெடியில் கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.
முனிஸ்காந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இசையமைப்பாளர் டி இமான் இசையில் ‘குலுக்கு குலுக்கு’ பாடல் ரசிக்க வைக்கிறது. ஆனாலும், பின்னணி இசை பரவாயில்லை ரகமாக உள்ளது.
இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சிகள் கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்வதை சற்று குறைத்திருக்கலாம். மொத்தத்தில் இப்படம் தலைப்புக்கேற்ப கிங் தான்.
– நிருபர் நாராயணன்