இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில் பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் 3,000 இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசு கிரீன் விசா வழங்கவுள்ளது. .
இந்தோனேசியாவில் உள்ள பழங்கால இந்திய கலாச்சார அடையாளங்களை கொண்ட பாலி தீவில், சக்திவாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை, இந்தியப் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டன் அரசு விசா தொடர்பான முக்கிய அறிவிப்பை உடனடியாக வெளியிட்டது.
பிரிட்டன் அரசின் இந்த புதிய அறிவிப்பு மூலம், பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலான இந்தியர்கள் கிரீன் விசா மூலம் 2 ஆண்டுகள் வரை, பிரிட்டனில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளால் இந்த வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சர்வதேச ஊடகங்களும் ஜி-20 மாநாட்டில் மோடி ஆற்றிய உரையை முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது