உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான்.
சூரிய ஜெயந்தி தினமே ரத சப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரிய பகவான் தனது ரதத்தின் வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குவது, இந்த சப்தமி திதியில் இருந்துதான் தொடங்குகிறார். இதன் மூலம் ஒளிக்கதிர்களுக்கு சூரியபகவான் வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ரதசப்தமி நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதால், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு. ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே.
தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால், ரதசப்தமி நாளில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும்.
கண்கண்ட தெய்வமான சூரியனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா” என்று சொல்லி வணங்கலாம். சூரியனை வழிபடுவோர் வாழ்வில் இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது உறுதி.