எம்ஜிஆரின் பேரனும் சுதா விஜயனின் மகனுமான ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள படம் இரும்பன்.
குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞராக நடித்து அசத்தியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அஜானுபாகுவான தோற்றமும் எம்ஜிஆரை போன்ற அழகும் கொண்ட புதிய கதாநாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவது உறுதி.
எம்ஜிஆரை பச்சைக் குத்திக்கொண்டு ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்துள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். ஜெயின் சமூக இளம்துறவி மஹிமாவாக வருகிறார் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா. இவர்கள் இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்கிறது, இவர்களின் காதலுக்கு நண்பர்கள் எப்படி உதவி செய்கின்றனர், கதாநாயகன் காதலியை கரம்பிடித்தாரா? என்பது தான் படத்தின் கதை.
கடலில் விழுந்த நிலையில், கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் வருவது அசத்தல். அப்போது “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” என்ற பழைய பாடலை ரீமேக் செய்து டூயட் சீன் வைத்துள்ளனர். பாடலும் அருமை, காட்சிப்படுத்திய விதமும் அழகு.
“உன் வெள்ளந்தியும் அழகுதான்” பாடல் ரொம்ப க்யூட். ஸ்ரீகாந்த் தேவாவின் பங்களிப்பு ரீமேக் சாங்கிலும் பின்னணி இசையிலும் நன்கு உணர்த்துகிறது.
பிளேடு கேரக்டரில் யோகிபாபு, ஆஸ்பத்திரி கதாபாத்திரத்தில் சென்றாயன் உள்ளிட்டோர் மிக கச்சிதமாக கொடுத்த வேலையை நிறைவாக செய்து பாராட்டை அள்ளுகின்றனர்.
புயலால் ஓர் அழகிய தீவில் படகு கரை ஒதுங்க, மாலை மாற்றிக் கொள்கிறது காதல் ஜோடி. அந்த தீவை மிக அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கேமரா.
படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கீரா.
மொத்தத்தில் இரும்பன், ரசிகர்களுக்கு கரும்பு போல் இனிக்கும் கரும்பன்.
– நிருபர் நாராயணன்