ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார்.
இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை காவல்துறை உதவி ஆணையர் திரு புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாணவர்களின் இந்த பிரச்சாரப் பேரணி, டிஎன்எச்பி ரோடு வழியாக மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அயப்பாக்கம் பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
– ஆர். நாராயணன்