பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர் பவர் நாடாக இந்தியா மாறியது என்றே கூறலாம்.
இந்தியாவின் ‘குண்டு பையன்’ மற்றும் ‘பாகுபலி ராக்கெட்’ ஆகிய செல்லப் பெயர்களை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு, கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு தற்போது வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் களமிறங்கி தகவல்களை சேகரித்து அனுப்புகிறது.
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் சாய்வுபலகை மூலம் வெளியே வந்து ஆய்வுப்பணியை தொடங்கியது. இதற்கு தேவையான மின்சாரத்தை அளிப்பதற்காக சூரிய சக்தி தகடுகள் விரிந்து, ஆன்டெணா, கேமராக்கள் ஆகியவை செயல்பட தொடங்கின.
ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதியில் மெல்ல நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அது தொடர்பான புகைப்படங்களையும் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும். இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும்.
பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமானது. அடுத்த 14 நாட்கள் சோலார் பேனல் மூலம் சூரிய வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும். ரோவர் கருவியும் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் என்ற 6 சக்கர ரோபோ வாகனத்தின் சக்கரங்களில் இந்தியாவின் அசோக சக்கரமும், இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோ வாகனம் நிலவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரும்போது, இந்த 2 சின்னங்களும் நிலவின் மேற்பரப்பில் அச்சு போல் பதிக்கப்படுகிறது. வேறு நாடுகள் இவ்வாறு யோசிக்காத நிலையில், நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதிலும் சாதனை படைத்துள்ளனர்.
சந்திரயான்-3 வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. சந்திராயன் வெற்றியில் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
நிலவின் மேற்பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இங்கு எடுக்கப்பட்ட மண்ணில் லேண்டரை தரையிறக்கி இஸ்ரோ சோதனை நடத்தியுள்ளது. இதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு சுமார் 50 டன் மண் அனுப்பப்பட்டதாக அதன் புவியியல் துறை இயக்குனரான பேராசிரியர் எஸ்.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ‘சந்திரயான்-1’ விண்கலம்தான்.
‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் போது வேகமாக மோதியது. ஆனால் தற்போதும் அதன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.
உலக நாடுகள் நிலவின் ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகளை செலவிடும் நிலையில், ‘சந்திரயான்-3’ திட்டத்தை ஒரு பாலிவுட் திரைப்படச் செலவில், அதாவது வெறும் 615 கோடி ரூபாயில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.
அடுத்து, நிலவுக்கு சந்திரயான்-4 அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொள்ள இருக்கிறது. சந்திரயான்-4 மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் அனுப்பப்பட உள்ளது. மேலும், இந்த விண்கலம் நிலவில் உள்ள கனிம வளங்களை தோண்டி எடுத்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
சந்திரயான் திட்டத்தின் மூலம் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறக்கி மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் நிலவின் அறியப்படாத உண்மைகளை உலகிற்கு எடுத்துக் கூறப்போவது இந்தியா தான். அந்த வகையில், உலக நாடுகள் இந்தியா தரப்போகும் தகவல்களை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளன.
இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றிப் பயணத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நிருபர் டைம்ஸ் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்