ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக் குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்டவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.
சுற்றுச்சூழல் மாற்றங்கள், செல்போன் கோபுர கதிர்வீச்சு, விளைபயிர்களில் தெளிக்கப்படும் நச்சு உரங்கள் போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. கிராமப்புறங்களில் இன்னும் உள்ள தோட்டங்களுடன் கூடிய வீடுகளால் குருவிகளுக்கு எளிதாக உணவு கிடைக்கின்றன.
சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் பாதுகாக்க பறவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க போராடி வருகின்றனர்.
வீட்டின் தாழ்வாரங்கள், பால்கனி, மொட்டி மாடியில் குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். மேலும், சிறுதானியங்களை அவற்றுக்கு வைக்க வேண்டும். மரப்பலகையில் செய்யப்பட்ட கூடுகளை வாங்கி வைத்தும் சிட்டுக்குருவி இனம் வாழ வழி வகுக்கலாம். நம் நண்பர்களான சிட்டுக்குருவிகள் இனம் அழியாமல் காக்க உறுதியேற்போம்.