‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி. இவர் தனது 3 தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த 3 சகோதர்களை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். ஆனால், அவரது தங்கைகள் தாங்கள் காதலிக்கும் நபர்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நடிக்க வைத்து கவுண்டமணியை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
அதே நேரத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட முத்தையா முயற்சிக்கும் போது, அவரது கார் டிரைவருக்கு சீட் கொடுத்து கவுண்டமணியை கடுப்பேற்றுகிறது கட்சி. இதனால், சுயேட்சையாக களமிறங்கும் முத்தையா தேர்தலில் வென்றாரா என்பதும், குடும்பத்தில் நடந்த காதல் அரசியலில் யார் வென்றார்கள் என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றினாலும், தமது வழக்கமான நக்கல், நையாண்டி, காமெடி என பிரத்யேக உடல் மொழியிலும் பேச்சு மொழியிலும் ஸ்கோர் செய்கிறார் கவுண்டமணி.
யோகிபாபு, அன்பு மயில்சாமி, ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், சென்றாயன், இயக்குனர் சாய் ராஜகோபால் என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரின் பாடல் வரிகள் இனிமை. பின்னணி இசை படத்திற்கு உறுதுணையாக உள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை நையாண்டியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. தியேட்டரில் கைத்தட்டல்களையும் அள்ளுகிறது. அந்த வகையில், இயக்குநர் சாய் ராஜகோபால் வெற்றி பெற்றிருக்கிறார்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற கலைஞனாக திகழும் கவுண்டமணி, தனது 2-வது இன்னிங்ஸிலும் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். அவர் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ அல்ல, ‘லட்சம் ஓட்டு முத்தையா’ என்பதே பொருத்தமாக இருக்கும்.
– நிருபர் நாராயணன்