சென்னை கே.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை வைத்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு திறமையான இளைஞர் குழு பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறது.
உபாசனா, பாரி, ஸ்ரீதர், சுரேந்தர், சந்தோஷ் ஆகிய ஐவரும் இந்த கேரக்டர்களில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சபாஷ்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து இடைத் தேர்தலுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும்போது, பணக்கார வேட்பாளர் ஒரு இளம்பெண்ணுடன் இருப்பதுபோல் கிரியேட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை தயாரிக்கின்றனர். அதை மற்றொரு வேட்பாளருக்கு அனுப்பி, தேர்தல் நேரத்தில் பெரும் தொகை கேட்டு பேரம் பேசுகின்றனர். எதிர்பார்த்தபடி அவரும் 17 கோடி ரூபாய் தர ஒப்புக் கொள்கிறார்.
ஆனால், பின்பு ரூட் மாறி தர மறுக்கிறார். அவரிடம் இருந்து பணத்தை பெற இளைஞர்கள் என்ன செய்தார்கள்?. அவர்களுக்கு 17 கோடி ரூபாய் பணம் கிடைத்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதாநாயகியும் 4 நண்பர்களும் ஒரே அறையில் இருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நகர்வும் அருமை. அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். வேட்பாளரின் உதவியாளராக வரும் எம்.எஸ். பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
கே.எம்.ராயனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. மணி தாமோதரன் படத்தை அற்புதமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
அரசியல் வசனங்கள் சாட்டையடி ஆக உள்ளது. ஓட்டை விற்கும் மக்களையும், அதை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த படம் கூறும் மெசேஜ் மக்களை சென்றடைந்தால் அதுவே இப்படத்தின் வெற்றி. அந்தவகையில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் “ஒரு தவறு செய்தால்” வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.
– நிருபர் நாராயணன்