இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்.
விண்வெளி ஆய்வு, ஏவுகணைத் தயாரிப்பு, அணுகுண்டு சோதனை, தகவல் தொழில்நுட்பம், கிரிக்கெட் என்று சகலத் துறையிலும் சக்கைப்போடு போடும் இந்தியா, தற்போது ஒலிம்பிக்கிலும் ஒளிரத் தொடங்கியிருக்கிறது.
கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி வீரர் நீரஜ் சோப்ரா இந்தியர்களின் கவுரவத்தை காப்பாற்றியது போல், தற்போது மனு பாக்கர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்த மனு பாக்கர், பள்ளி பருவத்தில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாக்சிங் என சகல விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஷூட்டிங் மீது கவனத்தை திருப்பியுள்ளார். இதையடுத்து, 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தகுதி சுற்றிலேயே தனது துப்பாக்கி பழுதானதால், அப்போட்டியில் இருந்து வெளியேறினார் மனு பாக்கர்.
தற்போது, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் நமக்கு 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கிறார்.
ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்திருக்கிறார்.
பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கிருஷ்ணர் மீது பெரும் பக்தி கொண்டவர் மனு பாக்கர். ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய போது பகவத் கீதையின் வசனங்களே தனக்கு ஊக்கமளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
– நிருபர் நாராயணன்