சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த “லெஜண்ட்” திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படத்தை ஓடிடியிலும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் குழுமத்தின் தலைவரான சரவணன், தன் நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான முகமாக திகழ்ந்தார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இவரது ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர், சொந்தமாக தயாரித்து நடித்த “லெஜண்ட்” திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளங்களில் நேர்மறையாகவும் நகைச்சுவையாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே, முன்னணி நடிகர்களுக்கு நிகராக இப்படம் 40 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. அநேகமாக, கோலிவுட்டில் முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றவர் லெஜண்ட் சரவணன் மட்டுமே என்று உறுதியாக கூறலாம்.
உலகத் தமிழர்களிடையே நன்கு அறிமுகமான லெஜண்ட் சரவணனின் திரைப்படத்தை காண ஓடிடி ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், இப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் ஓடிடி தளத்தில் காணலாம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள லெஜண்ட் சரவணன், “விமர்சனங்களை தாண்டி தான் வெற்றி கிடைக்கும் என பெரியவர்கள் கூறியுள்ளனர்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த பக்குவமும் எளிமையும் அவரை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. நிருபர் டைம்ஸ் சார்பில் அவருக்கு அன்பான வாழ்த்துக்கள்.
– நிருபர் நாராயணன்