உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி மலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கவுன்ட்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில், மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும், கிராம மக்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக ஓலைப் பெட்டிகளும் விற்கப்பட உள்ளது.