ஊரின் பெயரை கம்பீரமாக தாங்கி நிற்கும் இந்த பெயர்ப் பலகைக்கு மேலே, மின்சாரக் கம்பி செல்கிறது பாருங்கள்… ஆனால், இதில் கம்பி மட்டும் தான் உள்ளது, மின்சாரம் வராது என்ற உண்மை உள்ளூர் மக்களுக்கு தான் தெரியும்…!
ஆம், சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மானாமதுரை அருகேயுள்ள இந்த அழகிய கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர்.
அடிக்கடி மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் ஆகியவற்றை அரங்கேற்றுவதில், இவ்வூரில் மின்சார வாரியம் அபார சாதனை புரிந்து வருகிறது. ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கான முறை மின்வெட்டு ஏற்பட்டால் அதை வேறு என்னவென்று சொல்வது…!
கட்டிக்குளம் கிராமத்தில், அரை நூற்றாண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள், மின்கம்பிகள் இன்னும் புதுப்பிக்கப்படாமல் இருப்பது உலக அதிசயமாக உள்ளது. அதுவும் பலமுறை அறுந்து விழுந்த மின்கம்பிகளைக் கூட மாற்றாமல், அப்படியே முடிச்சு போட்டு பயன்படுத்துவதை பார்த்தால், நாம் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை நமக்கே எழுப்புகிறது.
பழங்கால வசதிகளுடன் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் குறைந்தழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுவதால், ஏ.சி, கிரைண்டர், மிக்சி மட்டுமல்ல வெப்ப அலை வீசும் வெயில் காலத்தில் ஃபேன் கூட ஓடாததால் மக்கள் தவியாய் தவித்தனர். மேலும், குறைந்தழுத்த மின்சாரத்தால் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனப் பொருட்களும் பழுதாகிவிடுகின்றன.
மக்கள் பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை. மின்சார வாரியத்தைக் கண்டித்து டிரான்பார்மருக்கு பூஜை செய்தும், இரவில் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மின்சார வாரியம் வழக்கம் போல் தூங்கி வழிகிறது.
மின்சார வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் கட்டிக்குளம் கிராமத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதாக எமது “நிருபர் டைம்ஸ்” செய்தியாளரிடம் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
அரசு வேலைக்கே லாயக்கற்ற இதுபோன்ற அதிகாரிகள் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
அரை நூற்றாண்டு காலமாக டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள், மின்சாரக் கம்பிகள் புதுப்பிக்கப்படாதது ஏன்?
கட்டிக்குளத்தில் மின்சார வாரிய பராமரிப்புக்காக கடந்த 50 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை குறித்த முழு விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஊர்மக்களை இருளில் இருந்து காப்பாற்றுங்கள்.
கட்டிக்குளம் கிராமத்தில் வெளிச்சம் வருமா? மக்கள் காத்திருக்கிறார்கள்…
– புலித்தேவன்