உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”.
படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என பல பரிமாணங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார், நமது விளையாட்டுத்துறை அமைச்சர்.
இதுபோன்ற மாறுபட்ட படங்களை உங்களிடம் இருந்து அதிகளவில் உங்கள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர்களை ஏமாற்றிவிடாதீர்கள்… ப்ளீஸ்…!
வீட்டு உரிமையாளரின் மகளை காதலிக்கும் உதயநிதியை, கோபத்தில் வீட்டை காலி செய்யுமாறு கூறுகிறார் அவரது தந்தை. இந்நிலையில், நண்பருடன் இணைந்து மது அருந்தும் கதாநாயகன், சாலையில் ஒரு விபத்தை கண்டு அருகே செல்கிறார். அங்கே காருக்குள் இருக்கும் பூமிகாவை அவரது வீட்டில் கொண்டு விடும் உதயநிதி, மறுநாள் அந்த பெண் அதே காரில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அந்த பெண் யார், அவரை கொன்றது யார் போன்ற கேள்விகளுடன் படம் ஜெட் வேகத்தில் நகரத் தொடங்குகிறது.
கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்கிறது. இயக்குநர் மு.மாறனை இதற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் படைப்பு.
அழகுப் பதுமை ஆத்மிகா பெயருக்கேற்றார் போல் ஆத்மார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருக்காகவே, அதாவது ஹீரோயின் கதாபாத்திரத்திற்காகவே படத்தில் குட்டி ஃபிளாஷ்பேக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இரவில் சாலையில் அறிமுகமாகி, மறுநாள் காரில் இறந்து கிடக்கும் பெண்ணாக பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரசன்னா கச்சிதமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரமும் படத்திற்கு அவசியமானதே. நடிகர் சதீஷ் சில காட்சிகளுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
சித்துகுமாரின் பின்னணி இசை அசத்தல். ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் மிக நேர்த்தியாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
காரில் சடலத்துடன் சென்னை நகர சாலைகளில் உலா வரும் கதாநாயகனை, போலீசார் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துவிட மாட்டார்களா? இப்படி சின்னஞ்சிறு லாஜிக் இடித்தாலும், ஒரு திரில்லர் படத்திற்கு இது பொருந்தாது என்றே கூறலாம்.
மொத்தத்தில் “கண்ணை நம்பாதே” சூப்பர் திரில்லர் படம். ரசிகர்கள் தியேட்டருக்கு நம்பிச் சென்று ரசித்து பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்