ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது கஸ்டடி திரைப்படம். 90களில் ஆந்திராவில் நடக்கும் கதை.
கதாநாயகன் நாக சைதன்யா (நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர்) ஹெட் கான்ஸ்டெபிளாக நடித்து படத்தை பரபரப்பாக நகர்த்திச் செல்கிறார். கீர்த்தி ஷெட்டியுடனான காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் குற்றவாளி அரவிந்த்சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமார் உட்பட அதிகார வர்க்கத்தினர் முயற்சிக்கின்றனர். அதை தடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போராடுகிறார் நாயகன்.
அதே நேரத்தில், காதலி கீர்த்தி ஷெட்டியும் வீட்டை விட்டு ஓடி வர, நாக சைதன்யா என்ன செய்தார் என்பது மீதிக்கதை.
நாக சைதன்யாவின் கோலிவுட் வருகை நல்ல முடிவு. ஆக்ஷன் படத்திற்கேற்ப அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குற்றவாளியாக அரவிந்த்சாமி அற்புதமாக நடித்திருக்கிறார். அவரது என்ட்ரிக்கு பிறகே படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.
போலீஸ் அதிகாரியாக சரத்குமார், ஜீவா, ஏஜெண்ட் ப்லிப்ஸ் ஆக ராம்கி, ப்ரியாமணி என தமிழ் சாயல் பூசியுள்ளனர்.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வந்துள்ள கஸ்டடிக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
அணையின் தண்ணீர் செல்லும் குழாய்க்குள் நடக்கும் சண்டை ரசிக்க வைக்கிறது. அற்புதமான கேமரா காட்சிகள்.
மொத்தத்தில் வெங்கட் பிரபுவின் ஜாலி கமர்சியல் அம்சங்களுக்காக கஸ்டடி படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்