பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இப்படத்தின் மூலம் செல்வின் ராஜ் சேவியர் கோலிவுட்டில் புதிய இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதாநாயகன் சதீஷ் ஒரு நாள் தெரியாமல் ட்ரீம் கேட்ச்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் இறக்கை ஒன்றை பிய்த்து விடுகிறார். இதனால் அவர் தூங்கும்போது கனவில் பாழடைந்த அரண்மனைக்குள் பேயிடம் சிக்கிக் கொள்கிறார். மேலும், அவருக்கு நெருங்கியவர்களும் இறக்கையை பறித்து கனவு உலகில் சிக்கி தவிக்கிறார்கள்.
இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
வழக்கமாக திகில் திரைப்படங்களின் கதை, நிஜத்தில் நடப்பது போன்று தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இதன் கதை கனவில் நிகழ்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான கதைக்காக இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.
காமெடியன் டூ ஹீரோ என்னும் சாகச திரைப் பயணத்தில், சந்தானம், சூரி, யோகிபாபு வரிசையில் தற்போது சதீஷ் இணைந்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் மட்டுமல்ல சீரியஸான நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார் சதீஷ். இனி அவர் தொடர்ந்து கதாநாயகனாகவே தொடரலாம்.
சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட சக கலைஞர்களும் படத்திற்கு கூடுதல் பலம்.
பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தின் முதல் பாதி செம விறுவிறுப்பாக நகர்கிறது. மாறுபட்ட கதைக்களம் இப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட் என்றே கூறலாம்.
மொத்தத்தில், காமெடி பிளஸ் திரில்லர் படமாக வெளிவந்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன், இரண்டரை மணி நேரம் தியேட்டரில் பொழுதுபோக்க விரும்பும் ரசிகர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது.
– நிருபர் நாராயணன்