நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், “சைக்கிள்” என்னும் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன். 1980-களில் நடப்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சேலம் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தில், 5 சிறுவர்கள் விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அன்றைய காலத்தில் வசதியானவர்கள் வீடுகளில் மட்டுமே சைக்கிள் வைத்திருப்பார்கள். இந்நிலையில், 5 சிறுவர்களில் ஒருவன் சொந்தமாக சைக்கிள் வாங்க, 3 சிறுவர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டு சைக்கிள் கற்கிறார்கள்.
மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் சைக்கிளை அந்த கிராமத்தில் வாடகைக்கு எடுத்து பழகுகிறான். ஆனால் சிறுவனுக்கு சைக்களில் கால் எட்டாததால், குரங்கு பெடல் போட்டு ஓட்டுகிறான்.
சிறுவன் மாரியப்பனின் தந்தையாக நடராஜா சர்வீஸ் கந்தசாமி என காளி வெங்கட்டை அறிமுகம் செய்யும் காட்சி செல கலகலப்பு. அவருக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் அப்பாவுக்கு தெரிந்தால் பிரச்னை வரும் என அஞ்சுகிறான் மாரியப்பன். ஒருநாள் தந்தைக்கு உண்மை தெரிய வருகிறது. இதனால் உருவான பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டான்? என்பதே படத்தின் மீதிக்கதை.
குழந்தைகள் கண்டு மகிழும் வகையில் இயக்குநர் இந்த படத்தை அற்புதமாக படைத்திருக்கிறார். பல விருதுகளை குவிக்க வாய்ப்புள்ளது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
5 சிறுவர்களுமே போட்டி போட்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மாஸ்டர் சந்தோஷ் படத்தில் மாரியப்பன் கேரக்டரில் சும்மா பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
சைக்கிள் கடை ஓனராக பிரசன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட்டின் நடிப்பு அருமை.
இன்றைய அவசர உலகில், குழந்தைகள் செல்போன், லேப்டாப், சோசியல் மீடியா என பிசியாக பொழுதுபோக்கும் நிலையில், 80-களில் விடுமுறையில் சைக்கிள் ஓட்டியும், விளையாடியும் சிறுவர்கள் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர் என்பதை இயக்குனர் கமலக்கண்ணன் காட்சித்திரையில் கச்சிதமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பால்ய காலத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுமி பாஸ்காரனின் கேமராவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
குறைந்த பட்ஜெட்டில் தரமான தமிழ் படமாக “குரங்கு பெடல்” வெளியாகியுள்ளது. தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.
– நிருபர் நாராயணன்