காசு தராமல் ஓசியில் செய்தி
கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper Society புகார் தெரிவித்துள்ளது.
இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அமைப்பின் பொது செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
செய்திக்காக முதலீடு, செலவு
இந்திய செய்தி ஊடகங்கள் வாசகர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன. ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, அந்த செய்திகளை ‘கூகுள்’ பயன்பாட்டாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேலும், பல்வேறு வகைகளில் அவற்றை மேற்கோள் காட்டவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
வெளிநாடுகள் இயற்றிய சட்டம்
செய்திகளை வழங்குவதற்காக ஊடகங்கள் பெருமளவு முதலீடு செய்து தொடர்ந்து செலவு செய்கின்றன. ஆனால் அவற்றை எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் கூகுள் நிறுவனம், அந்த செய்திக்கு உரிய பணத்தை இந்திய ஊடகங்களுக்கு தருவது இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளில், இவ்வாறு செய்திகளை பயன்படுத்த சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு ‘கூகுள்’ போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உரிய பணம் தரவேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளன.
பத்திரிகை நிறுவனங்கள் புகார்
‘கூகுள்’ நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ஈட்டிய வருவாய் பற்றியோ, அதில் ஊடக நிறுவனங்களுக்கு எத்தனை சதவீத பணம் கொடுக்கிறது என்பது பற்றியோ தெரிவிப்பது இல்லை. எனவே, ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் (சி.சி.ஐ.) இந்திய பத்திரிகை நிறுவனங்கள் சங்கம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கூகுள் இந்தியா, அதன் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள் ஆகியவை செய்தி மற்றும் விளம்பர சேவை தொடர்பாக தங்கள் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இது போட்டி சட்டம்-2002-ன் 4-வது பிரிவை மீறிய செயல் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை வளையத்தில் கூகுள்
இப்புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், இது போட்டி சட்டம்-2002-ஐ மீறிய செயல் என்பதற்கு முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தது. எனவே, இந்திய போட்டி ஆணையம் இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தனது தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்திய பத்திரிகை நிறுவனங்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும், மின்னணு செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (டி.என்.பி.ஏ.) தாக்கல் செய்த புகாரையும் ஒன்றாக இணைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
செய்தி பயன்பாட்டுக்கு கட்டணம்
இந்தியாவில் தற்போது அச்சு ஊடகங்கள் பெரும் சிரமத்தில் இயங்கி வருகின்றன. விற்பனை சரிவு, குறைந்த விளம்பரங்கள், காகித விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அவை தடுமாறி வருகின்றன. அதே நேரத்தில் செய்தி இணையதளங்கள் மற்றும் பத்திரிகை சார்ந்த மின்னணு ஊடகங்கள் செய்திக்காக தொடர்ந்து அதிகம் செலவிட்டு வரும் நிலையே உள்ளது. இச்சூழலில், கூகுள் பயன்படுத்தும் செய்திகளுக்கு உரிய தொகை இந்திய பத்திரிகை நிறுவனங்களுக்கு கிடைத்தால், ஊடகத்துறையின் சிக்கல்கள் சற்று குறையும்.
– நிருபர் ஆர்.நாராயணன்