கதாநாயகனாக 70 வயது முதியவர் கதாபாத்திரத்தை அமைத்ததற்காகவே முதலில் படக்குழுவை பாராட்டியே தீரவேண்டும். இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றியே சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் தவம் கிடக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றும் முதியவர் கதிரேசகுமார், சைக்கிளில் வீடு திரும்புகையில் கர்ப்பிணி ஒருவர் உட்பட 5 பேர் காரில் பின்னால் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வழிவிடாமல் முதியவர் செல்ல, ஒருகட்டத்தில் அவரை காரை விட்டு கீழே இறங்கிவந்து தாக்குகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து நடுசாலையில் சைக்கிளை போட்டு அந்த காரை தடுக்கிறார்.
யார் அந்த பெரியவர். அவர்களுக்கும் காரில் வருபவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிக்கதை.
முதியவர் வேடத்தில் தயாரிப்பாளர் கதிரேச குமாரே நடித்துள்ளார். யதார்த்தமான நடிப்பில் சிறிதும் பிறழாமல் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். முதியவர்களை ஒதுக்கித் தள்ளும் இன்றைய அவசர உலகில், அவர்களாலும் எதுவும் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது கதிரேச குமாரின் கதாபாத்திரம்.
படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வு. அவர்களும் குறைசொல்ல முடியாத பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
அஜித்குமாரின் ஒளிப்பதிவு அருமை. கெபியின் பின்னணி இசையோ புதுமை. இவை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மறுபுறம், யாழ் குணசேகரனின் இயக்கத்தில் யதார்த்தம் மிளிர்கிறது. முதியவர்களின் நேர்மையான வாழ்க்கையை அழகாக வெள்ளித்திரையில் கொண்டு வந்துள்ளார்.
மொத்தத்தில் கெழப்பய செமப்பய…!
– நிருபர் நாராயணன்