நடிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71.
மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த் சினிமா மீது தீராக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் சூபர்வைசராக பணியாற்றினார்.
1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தீவிரப்பற்றுக் கொண்ட விஜயகாந்த் அவரது பெயரை தனது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
மேலும், 1991-ம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் திரைப்படம் அவரது 100-வது படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. இந்த படம் தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்னும் அடைமொழியை தந்தது.
தமிழ் சினிமாில் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திறமையாக செயல்பட்டு சங்கத்தின் கடனையும் அடைக்கச் செய்தார்.
கடந்த 2005-ல் தேமுதிக என்னும் கட்சியை தொடங்கிய அவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.
2020-ல் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில், இச்செய்தியை அறிந்த கேப்டன் விஜயகாந்த், கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொள்ளலாம் என நிலத்தை தர முன்வந்தார்.
இப்படி சினிமா, அரசியல் மட்டுமின்றி வள்ளல் மனம் படைத்தவராகவும் விளங்கிய விஜயகாந்தின் மறைவால் அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.