அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time).
தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக வருகிறார் விஜய். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுவினரை அவர்கள் இருக்கும் நாட்டிற்கே சென்று போட்டுத் தள்ளுகிறார். அப்படி ஒரு முயற்சியின் போது, தனது 5 வயது மகனை இழக்கிறார். இதனால் மனைவி சிநேகா அவரை விட்டு பிரிந்து செல்கிறார். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைப் போன்ற தோற்றத்தில் உள்ள இளைஞரை சந்திக்க நேரிடுகிறது. அதன் பிறகு பல திருப்பங்கள், எதிரிகளின் சவால்களை முறியடித்தல் என ஒரு சாகசப் படமாக நகர்கிறது கோட்.
விஜய் இரு வேடங்களில் மிக அசால்ட்டாக நடித்து பிரமாதப்படுத்தி இருக்கிறார். காதல், நடனம், ஆக்சன் என அனைத்திலும் அக்மார்க் ரகம். இவர் தொடர்ந்து நடிக்க மாட்டாரா என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்படுகிறது. இடைவேளையில் மக்கள் இதுபற்றி தான் பேசுகிறார்கள்…!
மூத்த விஜய் ஜோடியாக சிநேகா அழகாக நடித்துள்ளார். இன்னும் அவர் இளம் கதாநாயகி தோற்றத்திலேயே இருக்கிறார்.
பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சிவகார்த்திகேயன், யுகேந்திரன், அஜ்மல், விடிவி கணேஷ் என இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. கூடுதல் இனிப்பாக த்ரிஷா, லைலாவும் இருக்கிறார்கள்.
வில்லனாக வரும் மோகன் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
பிரேம்ஜி, யோகிபாபு கூட்டணி நம்மை சிரிக்க வைத்து வயிற்றை பதம் பார்க்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதம். இளையராஜாவின் பாடல்களை படத்தில் ஆங்காங்கே ஒலிக்கச் செய்திருப்பது அருமை.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இருக்கிறது. மிக நீளமான படத்தை கடைசி வரை நேர்த்தியாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கிளைமாக்ஸில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் காட்சிகள் அவரது புதுமை படைப்பாற்றலுக்கு நல்லதொரு உதாரணம்.
படத்தில் அதிகளவில் அரசியல் தாக்கம் இருக்கும் என எதிர்பார்த்தால், அப்படி ஒன்றுமில்லை.
3 மணி நேரம் ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம். அந்த வகையில் கோட், எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறது.
– நிருபர் நாராயணன்