கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர்.
இதனை கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கிறது. ஆனால், கிராமத்திற்கு வெளியே சென்று அதனை வாங்க அவ்வூர் மக்கள் மறுத்துவிட, கோபத்தில் அந்த கிராமத்திற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஒரு அரசியல்வாதி.
இதில் யார் வென்றார்கள் என்பதும், அந்த கிராமத்தின் புகழுக்கு பின்னால் உள்ள வெள்ளைச்சாமி என்பவரின் தியாகத்தையும் அழகாக எடுத்துரைப்பது தான் சான்றிதழ் படத்தின் கதை.
அரபு நாடுகள் பாணியில் உள்ள கருவறை கிராமத்தின் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் ஊரும் நாடும் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எழும் வகையில் அற்புதமான கதையம்சம் உள்ள படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் பாடல்களை கொண்ட “தூத்துக்குடி” படத்தில் நடித்த ஹரி, தற்போது கருவறையில் வெள்ளைச்சாமியாக வந்து நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
நிருபராக வரும் ஆஷிகா அசோகன் – ரோஷன் பஷீர் காதல் காட்சிகள் அழகானவை.
அமைச்சர் கன்ட்ரோல் கந்தசாமி வேடத்தில் அசத்தியிருக்கிறார் ராதாரவி. நடிகை கெளசல்யா, மனோபாலா உள்ளிட்டோரின் பங்களிப்பும் கனகச்சிதம். சிரிப்பு காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லை.
கருவறை கிராமத்தின் அடையாளங்களையும் பாடல் காட்சிகளையும் தனது கேமராவுக்குள் அற்புதமாக பதிவு செய்து வெள்ளித்திரையில் பிரம்மிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன் சிவன். இதுபோல், கிராமத்து காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் நாஞ்சில் ராபர்ட்டின் உழைப்பு தெரிகிறது.
இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறை சொல்ல முடியாத வகையில் உள்ளது. படத்திற்கும் வலு சேர்க்கிறது.
நல்ல கருத்துக்களை விதைத்திருக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் நற்சான்றிதழுக்கு உரியது.
– நிருபர் நாராயணன்