மணிபால் இயக்கத்தில், தீரன் ஸ்ரீ நட்ராஜ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் சாலா.
சென்னை ராயபுரத்தில் மதுபான பார் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த மோதலில், அருள்தாஸ் கும்பலுக்கு ஆதரவாக நமது ஹீரோ தீரன் களமிறங்குகிறார். அதேநேரத்தில், மதுஒழிப்பு பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளார் ஹீரோயின் ரேஷ்மா. இவர்கள் இடையே முதலில் மோதல்… அப்புறம் காதல்…!
மதுபான பார் யார் வசம் சென்றது, ரேஷ்மாவின் போராட்டம் வென்றதா, தீரனின் காதல் கைகூடியதா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
உலகத் தரத்தில் தமிழ்ப் படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில், தீரன் தனது நடிப்பிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரசிகர்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கும் காலம் இது…! எனினும், நாயகனின் கட்டுமஸ்தான உடல் ஆக்சன் காட்சிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.
ஆசிரியை வேடத்தில் வரும் ரேஷ்மா அளவான, அழகான நடிப்பை தந்திருக்கிறார். இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.
ரவுடி வேடத்தில் வரும் அருள்தாஸ் தனது கச்சிதமான நடிப்பால் பளிச் என ஜொலிக்கிறார்.
தீசனின் இசை ஜாலமும், ரவீந்திரநாத் குருவின் கேமரா விளையாடலும் “சாலா” என்னும் ரயிலுக்கு இரு தண்டவாளமாக இருந்து உதவி புரிந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் மதுஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நல்லதொரு கருத்துடன் நேர்த்தியாக கதையை நகர்த்தியிருக்கிறார் டைரக்டர் மணிபால்.
சாலாவுக்கு சலோ…!
– நிருபர் நாராயணன்