பாய்ஸ் புகழ் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
அடிக்கடி சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தேசிய அளவில் சர்ச்சையில் சிக்கும் நடிகர் சித்தார்த், அதை செயலிலும் காட்டும் வகையில், சமூக அக்கறை கொண்ட படத்தில் நடித்திருப்பது பாராட்டக்குரியது.
ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சித்தார்த்.
அண்ணன் மகள் மீது அதீத பாசம் செலுத்துகிறார். அச்சிறுமியின் தோழியாக சித்தார்த்தின் நண்பர் மகள் வருகிறார்.
இந்நிலையில், நண்பனின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அந்த குழந்தை உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது அம்பலமாகும் நிலையில், அனைவரின் சந்தேகப் பார்வை சித்தார்த்தின் மீது விழுகிறது.
கடைசியில் தன் மீதான பழியில் இருந்து விடுபட்டு உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார் ஹீரோ சித்தார்த். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை தந்திருக்கிறார்.
கதாநாயகி நிமிஷா சஜயன் அழகான தேர்வு. காதல் காட்சிகளில் இளமை துள்ளல்.
சித்தா படத்தின் மூலம் குழந்தைகள் கவனிப்பில் பெற்றோர் எப்படி கவனம் செலுத்த வேண்டும் என்பதை சொல்லித் தந்திருக்கிறார்கள்.
பெண் குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
– நிருபர் நாராயணன்