தமிழ் திரையுலகில் சூது கவ்வும் படம் மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு அதன் 2-ம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது.
மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜூன். எஸ்.ஜே. இயக்கத்தில் வெளியாகியுள்ளது சூது கவ்வும்-2.
ஆளுங்கட்சி தலைவரான வாகை சந்திரசேகர் கோமாவில் இருந்து கண்விழிக்கும் போது, ஊழல்வாதி ராதாரவி முதலமைச்சர் பதவியில் இருப்பதைக் கண்டு கொதிப்படைகிறார். தனது சிஷ்யன் எம்.எஸ்.பாஸ்கர் ஆதரவுடன் புதிய கட்சி தொடங்கி ராதாரவிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மகனும் அமைச்சருமான கருணாகரன் ஆன்லைன் கேம் வழியாக மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான வழிமுறையை கண்டுபிடிக்கிறார். ஆனால், பணம் தொடர்பான அவரது முக்கியமான டேப்லெட் ஒன்று மாயமாகிறது. இதனால், கட்சியில் பணம் தர முடியாததால் எம்எல்ஏக்கள் கட்சி தாவுகின்றனர். இதனால் ஆட்சியும் கவிழ்கிறது. இன்னொரு பக்கம் கருணாகரனை பழிவாங்கத் துடிக்கிறார் மிர்ச்சி சிவா.
கருணாகரனுக்கு டேப்லெட் கிடைத்ததா? மற்றவர்களுக்கு அவர்களது நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் சூது கவ்வும் 2 படத்தின் கதை.
ஹீரோவாக மிர்ச்சி சிவா வழக்கமாக தனது பாணியில் பலவித ரசனைகளில் நடித்துள்ளார். அவரது டைமிங் கவுன்ட்டர்கள் இந்த படத்திலும் கைகொடுக்கிறது. ஹரிஷா ஜஸ்டின் அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார். இவர், கதைக்கும் நாயகனுக்கும் பொருத்தமான தேர்வு என்றே கூறலாம்.
கருணாகரன் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் முக்கிய தொடர்பாக இருக்கும் கருணாகரன் கதாபாத்திரத்தலும் நடிப்பிலும் முக்கிய பாலமாக உள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
படத்தின் கதையை சரியாக உள்வாங்கி, எட்வின் லூயிஸ் விஸ்வநாத் தனது பின்னணி இசை மூலம் பக்கபலமாக கைகொடுத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளன. இசைக்கு உறுதுணையாக கார்த்திக்கின் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.
படம் முழுக்க வசனங்களில் அரசியல் நெடி சற்று அதிகமாகவே உள்ளது. சமகால அரசியலை காமெடி சாட்டையர் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். காமெடி, சீரியஸ் என இப்படம் இருவேறு டிராக்கில் பயணித்தாலும் சூது கவ்வும்-2 என்னும் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழாமல், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போன்று வெற்றிக் கோட்டை எட்டியுள்ளது.
மிர்ச்சி சிவா என்னும் ஜெகஜால திரைக்கலைஞன் இருக்கும் போது, தாராளமாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் கவ்வியபடி ரசிக்கலாம்…!
– நிருபர் நாராயணன்