2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேர்தலை குறிவைத்து புதிய சென்ட் அறிமுகம்‘சமாஜ்வாடி அத்தர்‘ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் அட்டைப் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன், கட்சியின் சைக்கிள் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவிய பாட்டிலில் உள்ள ஆலிவ் பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் சமாஜ்வாடி கட்சியின் கொடியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
“இந்த வாசனை அனைவருக்கும் சொந்தமானது. இதனை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் சோசலிச சிந்தனையுடன் மணம் வீசுவார்கள். இந்த வாசனை திரவியம் 2022-ல் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும். இந்த வாசனை தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும். ஆனால் பொய்யின் மூலம் மலர்ந்த மலர் ஒருபோதும் நறுமணத்தைத் தராது” என தெரிவித்தார்.
அகிலேஷ் அறிமுகப்படுத்திய சென்ட் குறித்த செய்தி டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வாசனை திரவியம் குறித்த தகவலை, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து செய்து வருகின்றனர்.
இதனிடையே, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, அனைவருக்கும் சென்ட் கொடுத்து பொதுமக்களை கவர அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.