அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது.
மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என செம்பியை கொண்டாடலாம்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் தனது 10 வயது பேத்தியுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் வீராயி ஆக வரும் கோவை சரளா. காட்டில் விறகு சேகரித்து வாழும் பழங்குடி பெண்ணாக, அவர் படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
ஒருநாள் வீராயி பேத்தியை 3 பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட பேத்திக்கு அரணாக இருக்கும் வீராயி, அந்த கொடூர கும்பலுக்கு தண்டனை பெற்றுத் தந்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
உதவிக்கு வரும் போலீஸ் அதிகாரியும் பணம் கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்ய, பழிவாங்கப் புறப்படுகிறார் வீராயி. அவரை தாக்கிவிட்டு பேத்தியுடன் பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் செல்கிறார். ஒருகட்டத்தில் பேருந்து உரிமையாளரும் அதில் பயணிப்பவர்களும் வீராயிக்கு துணையாக நிற்கிறார்கள். குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதை வெள்ளித்திரையில் காணுங்கள்.
ஒவ்வொரு ப்ரேமிலும் உணர்ச்சிகரமான நடிப்பை கொடுத்து, தனது நகைச்சுவை இமேஜை இந்த படத்தின் மூலம் அப்படியே தகர்த்து எறிந்திருக்கிறார் கோவை சரளா. இப்படத்தில் 80 வயது பாட்டி வேடத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகள் காத்திருக்கின்றன என உறுதியாக கூறலாம்.
தம்பி ராமையா மற்றும் வழக்கறிஞராக வரும் அஸ்வின் ஆகியோரும் கச்சிதமான பங்களிப்பை அளித்துள்ளனர்.
செம்பி என்ற 10 வயது சிறுமியாக நடித்திருக்கும் குட்டிப்பெண் நிலா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிக்கத் தெரிந்த வருங்கால கதாநாயகியாக தமிழ் திரையுலகம் இவரை கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்.
கொடைக்கானலின் அழகை அப்படியே படம்பிடித்து கொண்டு வந்திருக்கிறது ஜீவனின் ஜீவனுள்ள கேமரா.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, உணவுர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.
மேக்கப் மற்றும் உடையலங்காரப் பணிகளை கவனித்தவர்களின் பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியது.
படத்தின் முடிவில் போடப்படும் என்டு கார்டில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்கான வாசகங்களை தவிர்த்திருக்கலாம். ப்ரிவியூ ஷோவில் இதை பத்திரிகையாளர்களும் எடுத்துக்கூற படக்குழுவுடன் வாக்குவாதமே நடைபெற்றது. ஆக, இந்த சர்ச்சை வாசகத்தை தவிர இப்படத்தில் குறையொன்றும் இல்லை.
வீராயி கதாபாத்திரம் மூலம் செம்பி திரைப்படத்தை தோளில் சுமந்திருக்கிறார் கோவை சரளா. ஆக, இதுபோன்ற நல்லதொரு படைப்பை, தியேட்டரில் கண்டு ரசித்து கொண்டாடுவோம்.
– நிருபர் நாராயணன்