ஜிகர்தண்டாவுக்கு புகழ்பெற்ற மதுரையில் அரசியல் செல்வாக்கு மிகுந்த ரவுடி ஆலியஸ் சீசராக உலா வருகிறார் ராகவா லாரன்ஸ்.
ஒரு நிகழ்ச்சியில் அவரது நிறத்தை வைத்து கேலி பேசும் ஒரு சினிமா நடிகர் அவரால் நடிகராக முடியாது என்று விமர்சிக்க, ராகவா லாரன்ஸ்க்கு சினிமா நடிகராகும் ஆசை வருகிறது. ஒருகட்டத்தில், தனது ஆசையை நிறைவேற்ற எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்கிறார். உலகப் புகழ்பெற்ற பிரபல இயக்குநர் சத்யஜித் ரேவிடம் பணியாற்றிய ரே தாசன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
உண்மையில் ரே தாசன் யார், ரவுடி ஆலியஸ் சீசரின் சினிமா ஆசையை நிறைவேற்றினாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் ராகவா லாரன்ஸ்-ம் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
முதல் பாதியில் பெரும் ரவுடியாகவும் இரண்டாம் பாதியில் மக்களை பாதுகாக்கும் நபராகவும் மாறுபட்ட நடிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். பல இடங்களில் ரசிகர்களின் கைதட்டல்கள் அள்ளிச்செல்கிறார் ராகவா லாரன்ஸ்.
ஆலியஸ் சீசரின் சுயசரிதையை அப்படியே படமாக எடுக்கலாம் என ராகவா லாரன்ஸை நம்ப வைத்து, அவரை ஏமாற்றும் டைரக்டராக எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. எஸ்.ஜே.சூர்யா தனக்கே உரிய பாணியில் அசத்தலாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.
நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, இளவரசு, ஷைன் டாம் சாக்கோ, சத்யன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளன.
1973-ல் நடைபெறும் கதைக்களத்தை அற்புதமாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் உழைப்பு காட்சிகளிலும் அதன் கோணங்களிலும் வெளிப்படுகிறது.
காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல், காட்டில் யானைகளின் இயல்பு என சமூக மற்றும் வன சூழலியல் குறித்தும் படம் விவரிப்பது அற்புதம்.
வித்தியாசமான கதை அமைப்பு, புதுமையான காட்சிகள், கச்சிதமான திரைக்கதவு நகர்வு என அமர்க்களப்படுத்துகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
சினிமா வழியே அரசியலையும் ஆட்டிப் படைக்கலாம் என சொல்ல வருகிறார் இயக்குநர். அந்தவகையில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.
– நிருபர் நாராயணன்