காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை.
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின் இயக்குநர் வி.அரண், வி.ஜே.ஆஷிக் ஆகியோர் நண்பர்களாக நடித்துள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் அரண் உருவாக்கிய தொலைபேசி ஒட்டுகேட்புக்கான கருவி மூலம், சுமார் 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் கைபேசி உரையாடல்களை கேட்க முடியும். ஆனால், தனது கல்லூரியில் பேராசிரியர்கள் முன்பு அதை விளக்கி டெமோ காட்டும்போது தோற்றுவிடுகிறார்.
இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நண்பர்கள் மூவரும் இன்பச்சுற்றுலா செல்லும் இடத்தில், ஒரு பெண் கடத்தப்படுவதை கண்டு, அவரை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். இதற்கு போன் ட்ராக்கரை பயன்படுத்துகிறார்கள். கடத்தப்பட்ட பெண் காப்பாற்றப்பட்டாரா? அதற்கு புதிய கருவி உதவியதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், அரண், வி.ஜே.ஆஷிக் ஆகிய மூவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆக்ஷன், அதிரடி என அனைத்திலும் அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார்கள். இதுபோன்ற திறமையான புதிய நடிகர்கள், புதிய இயக்குநர்களின் படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய வரவேண்டும்.
ஷாரிக்கின் காதலியாக வரும் கதாநாயகி அம்மு அபிராமி கச்சிதமாக நடித்திருக்கிறார். அழகு மிளிரும் இவருக்கு கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
ஆர்.வி.சரண் ஒளிப்பதிவும், அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுலம் பலமாக அமைந்துள்ளன.
சாதாரண கதையை செம விறுவிறுப்பாக வெள்ளித்திரையில் வழங்கியிருக்கிறார் இயக்குநர் வி.அரண். மொத்ததில் ஜிகிரி தோஸ்த், ரசிகர்களுக்கு ஒரு ஜாலி தோஸ்த்.
– நிருபர் நாராயணன்