பிக்பாஸ் புகழ் கவின் – பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள அழகான காதல், காமெடி கலந்த குடும்பப் படம் டாடா.
கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே கல்லூரியில் பயிலும் நிலையில், காதலில் விழுந்து கல்யாணம் செய்யாமலேயே கர்ப்பமாகிறார் அபர்ணா தாஸ். பெற்றோர் இவர்களை ஏற்க மறுக்க, ஒருகட்டத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் கவின். இதனால் இருவரிடையே மோதல்கள் வெடிக்கின்றன.
பிரசவ வலியில் துடிக்கும் போது, காதலனுக்கு செல்போனில் போன் போடுகிறார் அபர்ணா. அவர் பேசாமல் புறக்கணிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாயகி, ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அது மட்டுமல்ல, கவின் வரும் முன்பே குழந்தையை அங்கேயே விட்டு விட்டு மருத்துவமனையில் இருந்து மாயமாகிறார். இதனால், தன்னந்தனியே குழந்தையை வளர்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் கதாநாயகன்.
தன் காதலியை கவின் கண்டுபிடித்தாரா? அவர் ஏன் கைவிட்டு சென்றார்? என்பவை படத்தின் மீதிக்கதை.
சரவணன் மீனாட்சி சின்னத்திரை தொடரில் வேட்டையனாக வந்து அசத்திய கவின், அதே பாணியில் வெள்ளித்திரையிலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார். உருக வைக்கும் காதல் முதல் உருக்கமான காட்சிகள் வரை, அவரது நடிப்பு அக்மார்க் ரகம்.
பீஸ்ட் படத்தில் அமைச்சர் மகளாக நடித்த அழகுப்பதுமை அபர்ணா தாஸ், டாடாவில் அழகான காதலியாக வசீகரிக்கிறார். நடுத்தர வர்க்கத்து இளம்பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ, அதை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அபர்ணாவின் நடிப்பு அருமை.
பாக்யராஜ், ஐஸ்வர்யா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
கேமரா கோணங்களில் எழில்மிகு கவிதை தீட்டி தன் பெயரை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றே கூறலாம்.
காதல், பாசம், காமெடி, மோதல், பிரிவு என்று குடும்ப வாழ்க்கையின் அத்தனை வகைகளையும் அழகுற பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் கே.பாபு.
மொத்தத்தில், இப்படம் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று ரசித்து பார்க்க வேண்டிய ரகம்.
– நிருபர் நாராயணன்